காரில் கடத்திய 1,500 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை


காரில் கடத்திய 1,500 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 17 May 2018 11:00 PM GMT (Updated: 17 May 2018 9:48 PM GMT)

முட்டம் அருகே காரில் கடத்திய 1,500 லிட்டர் மண்எண்ணெயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அழகியமண்டபம்,

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்காக பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அவ்வப்போது அதிகாரிகள் கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் பறக்கும்படை தாசில்தார் ராஜசேகர் தலைமையில் துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தும்படி சைகை காட்டினார்கள். ஆனால், டிரைவர் நிறுத்தாமல் காரை வேகமாக ஓட்டிச்சென்றார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த காரை துரத்திச் சென்றனர். அம்மாண்டிவிளை அருகே சந்திப்பில் அந்த காரை மடக்கிப்பிடித்தனர். அதிகாரிகள் மடக்கியதும் காரில் இருந்த டிரைவர் தப்பியோடி விட்டார்.

பின்னர் அதிகாரிகள் காரில் சோதனை செய்தபோது, பிளாஸ்டிக் கேன்களில் மானிய விலையில் படகுகளுக்கு பயன்படுத்தப்படும் 1,500 லிட்டர் மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அதிகாரிகள் மண்எண்ணெயை பறிமுதல் செய்து இனயம் அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட காரை கல்குளம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், முதல் கட்ட விசாரணையில் கேரளாவுக்கு மண்எண்ணெய் கடத்த முயன்றது தெரியவந்தது. கடத்தலுக்கு பயன்படுத்திய கார் யாருடையது, அந்த காரை ஓட்டி வந்தது யார்? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story