சேலம் அரசு கலைக்கல்லூரியில் 8 நாட்களில் 3,600 விண்ணப்பங்கள் வினியோகம்


சேலம் அரசு கலைக்கல்லூரியில் 8 நாட்களில் 3,600 விண்ணப்பங்கள் வினியோகம்
x
தினத்தந்தி 18 May 2018 12:10 AM GMT (Updated: 18 May 2018 12:10 AM GMT)

சேலம் அரசு கலைக்கல்லூரியில் கடந்த 8 நாட்களில் 3,600 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன.

சேலம்,

சேலம் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியமைப்பியல், புவியியல், கணினிபொறி அறிவியல், பி.காம். வணிகவியல், பி.பி.ஏ., உள்ளிட்ட 19 இளங்கலை பட்டப்படிப்புகள் உள்ளன. இந்த பாடப்பிரிவுகளில் 1,538 இடங்கள் உள்ளன.

2018-2019-ம் கல்வியாண்டிற்கு இளங்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் கடந்த 10-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கல்லூரி வேலை நாட்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து மாணவ, மாணவிகள் தங்களுடைய மதிப்பெண் அடிப்படையில் எந்த பாடத்தை தேர்வு செய்து படிக்கலாம் என்பதை முடிவு செய்தனர். இதனால் வழக்கமான நாட்களை விட தேர்வு முடிவுகள் வெளி வந்தபின்பு கல்லூரியில் விண்ணப்பங்கள் வாங்குவதற்காக மாணவர்கள் குவிந்தனர். இதையடுத்து அவர்கள் வரிசையில் நின்று ஆர்வமாக விண்ணப்பங்களை வாங்கி சென்றனர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், இளங்கலை பாடபிரிவுகளுக்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விண்ணப்பங்கள் வருகிற 30-ந் தேதி விடுமுறை நாட்கள் தவிர்த்து வழங்கப்படும். கடந்த 8 நாட்களில் 3 ஆயிரத்து 600 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. ஜூன் 6-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை ஒவ்வொரு பிரிவுகளுக்கும் தனித்தனியாக கலந்தாய்வு நடைபெறும் என்றனர்.

Next Story