அரசு பஸ் டிரைவரை தாக்கிய வக்கீல் கைது


அரசு பஸ் டிரைவரை தாக்கிய வக்கீல் கைது
x
தினத்தந்தி 18 May 2018 5:45 AM IST (Updated: 18 May 2018 5:45 AM IST)
t-max-icont-min-icon

மாட்டுவண்டி போல் ஏன் ஓட்டுகிறாய்? என கூறி அரசு பஸ் டிரைவரை வக்கீல் தாக்கிய சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த வக்கீலை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து ஜங்சனுக்கு நேற்று காலை ஒரு அரசு டவுன் பஸ் புறப்பட்டு வந்தது. பஸ்சை விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜேந்திரன் (வயது 50) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக சண்முகம் இருந்தார்.

பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அதே பஸ்சில் மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த அன்பரசன் (47) என்பவரும் பயணம் செய்தார். இவர் நாமக்கல் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.

பஸ் சீலநாயக்கன்பட்டி வந்ததும் அன்பரசன் பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் அவர் டிரைவரின் இருக்கையின் கதவை திறந்து அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து டிரைவரை திடீரென சரமாரியாக தாக்கினார். ஏன்டா? பஸ்சை மாட்டுவண்டி போல் மெதுவாக ஓட்டுகிறாய்? என்று கூறி அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் டிரைவர் ராஜேந்திரனுக்கு காயம் ஏற்பட்டது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற வக்கீலை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அதே பஸ்சில் அவரை ஏற்றிக் கொண்டு அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) நாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வக்கீல் அன்பரசனை கைது செய்தனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story