பனவடலிசத்திரம் அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் சாவு தெருவிளக்கை சரிசெய்வதாக கூறி ஏறியதால் விபரீதம்


பனவடலிசத்திரம் அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் சாவு தெருவிளக்கை சரிசெய்வதாக கூறி ஏறியதால் விபரீதம்
x
தினத்தந்தி 19 May 2018 2:45 AM IST (Updated: 18 May 2018 6:04 PM IST)
t-max-icont-min-icon

பனவடலிசத்திரம் அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் பரிதாபமாக இறந்தார். வீட்டின் அருகே உள்ள தெருவிளக்கை சரிசெய்வதாக கூறி ஏறியதில் இந்த விபரீதம் நிகழ்ந்தது.

பனவடலிசத்திரம், 

பனவடலிசத்திரம் அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் பரிதாபமாக இறந்தார். வீட்டின் அருகே உள்ள தெருவிளக்கை சரிசெய்வதாக கூறி ஏறியதில் இந்த விபரீதம் நிகழ்ந்தது.

மின்சாரம் தாக்கி பலி

நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள ஜமீன்இலந்தைகுளத்தை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 38). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். ஊருக்கு வெளிப்புறமாக அமைந்துள்ள அவரது வீட்டின் அருகே தெரு விளக்கு ஒன்று கடந்த சில நாட்களாக எரியவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை அந்த மின்விளக்கை சரிசெய்வதாக கூறி நாகராஜன் மின்கம்பத்தில் ஏறியுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியாகி மின்கம்பத்திலேயே தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி மின்வாரியத்துக்கு தகவல் கொடுத்தனர்.

பரபரப்பு

அதன் பேரில் மின்வாரியத்தினர் விரைந்து வந்து மின்சாரத்தை நிறுத்தினர். மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் பனவடலிசத்திரம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். நாகராஜனின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நாகராஜனுக்கு வேலுத்தாய் என்ற மனைவியும், மதுமிதா, கலாராணி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகள் மதுமிதா நாகர்கோவிலில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியிலும், கலாராணி 11–ம் வகுப்பும் படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story