சாத்தான்குளம் அருகே பயங்கரம் கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
சாத்தான்குளம் அருகே கட்டிட தொழிலாளியை அடித்துக் கொலை செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம்,
சாத்தான்குளம் அருகே கட்டிட தொழிலாளியை அடித்துக் கொலை செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
கட்டிட தொழிலாளிதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 45). இவர் சென்னையில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு கலா என்ற மனைவியும், 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
செந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவர், அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான லிங்கத்திடம் (50) ரூ.1,000 கடன் வாங்கியதாகவும், பின்னர் செந்தில் கடனை திருப்பி கொடுக்காமல், காலம் தாழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.
கடனை திருப்பி கேட்டு...நேற்று முன்தினம் செந்தில், பக்கத்து ஊரான சின்னமாடன்குடியிருப்பு பகுதியில் உள்ள தன்னுடைய உறவினரின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து இரவில் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். பேய்க்குளத்தை அடுத்த பழனியப்பபுரம் பகுதியில் சென்றபோது, அங்கு வந்த லிங்கம் மற்றும் அவருடைய உறவினரான சாமுவேல் மகன் ஜெகன் ஆகிய 2 பேரும் சேர்ந்து, செந்திலை வழிமறித்து கடனை திருப்பி தருமாறு கூறினர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த லிங்கம், ஜெகன் ஆகிய 2 பேரும் சேர்ந்து உருட்டு கட்டையால் செந்திலை சரமாரியாக அடித்தனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த செந்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் லிங்கம், ஜெகன் ஆகிய 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
2 பேருக்கு வலைவீச்சுஇரவில் அந்த வழியாக சென்றவர்கள், செந்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட செந்திலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான லிங்கம், ஜெகன் ஆகிய 2 பேரையும் பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். கடனை திருப்பி தராததால் கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.