கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்ற கோரி நெல்லை தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை
நெல்லை அருகே கோவில் நிலத்தின் ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும் என்று கூறி கிராம மக்கள் நெல்லை தாலுகா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லை அருகே கோவில் நிலத்தின் ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும் என்று கூறி கிராம மக்கள் நெல்லை தாலுகா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜமாபந்திநெல்லை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று நடந்தது. ஜமாபந்தி அலுவலரான, நெல்லை கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ராமசுப்பிரமணியன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் தங்களுடைய நிலத்திற்கு உரிய பட்டா மாற்றம், கூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்றுதல், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றார்.
இதில் நெல்லை தாசில்தார் கணேசன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மாரியப்பன், குடிமை பொருள் வழங்கல் தாசில்தார் புகாரி, ஆதிதிராவிடர் நல தாசில்தார் மோகன், துணை தாசில்தார்கள் ஓசனா பெர்னாண்டோ, பட்டமுத்து, ஜெயந்தி, வின்சென்ட் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிராம மக்கள் முற்றுகைஇந்த நிலையில் நெல்லை அருகே உள்ள மாறாந்தை புதூர் கிராம மக்கள், தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்து, கோவில் நிலத்தின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், சப்–இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், இசக்கிதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் 10 பேரை மட்டும் அழைத்து கொண்டு ஜமாபந்தி அலுவலர் ராமசுப்பிரமணியத்தை சந்தித்து மனு கொடுக்க செய்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அந்த மனுவில், ‘நெல்லை அருகே புதூர் கிராமத்தில் உள்ள சூட்சமுடையார் சாஸ்தா கோவிலை சுற்றி ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு மற்றும் மாட்டு தொழுவம் அமைத்து உள்ளனர். இதுகுறித்து போலீஸ்நிலையத்தில் மனு கொடுத்து உள்ளோம். அதன்பேரில் அளவீடு செய்தபோது சரியாக நிலஅளவையர் செயல்படவில்லை. எனவே நீங்கள் கோவில் நில பிரச்சினையில் தலையிட்டு ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தரவேண்டும்’ என்று கூறி உள்ளனர்.
இலவச வீட்டுமனை பட்டாநெல்லை அருகே உள்ள வெள்ளாளன்குளம் பஞ்சாயத்து வெட்டுவான்குளம் கீழத்தெருவை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நெல்லை தாலுகா அலுவலகத்திற்கு வந்து ஜமாபந்தி அலுவலர் ராமசுப்பிரமணியத்தை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘வெட்டுவான்குளம் கீழத்தெருவை சேர்ந்த எங்களுக்கு இதுவரை இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. எந்தவித நலத்திட்ட உதவிகளும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக 3 முறை மனு கொடுத்து உள்ளோம். எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.