விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் திடீர் சாவு


விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் திடீர் சாவு
x
தினத்தந்தி 19 May 2018 4:00 AM IST (Updated: 19 May 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட வாலிபர் திடீரென இறந்தார். இது பற்றி மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நீலாங்கரை, துரைப்பாக்கம், கானத்தூர், தரமணி, வேளச்சேரி போன்ற பகுதிகளில் பூட்டிக்கிடக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து நீலாங்கரை குற்றப்பிரிவு போலீசார், குற்றவாளிகளை பிடிக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நீலாங்கரை பகுதியில் இரவு நேரங்களில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்ததாக சென்னை மெரினா கண்ணகி சிலை அருகே வசிக்கும் அந்தோணிராஜ்(வயது 21) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், போலீசார் அவரை நீலாங்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் அவர், வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்ததுடன், அவருடன் ஒரு கும்பலே ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவில் இருந்து விடிய, விடிய அந்தோணிராஜியிடம் போலீசார் விசாரணை நடத்தியதாகவும், அப்போது அவரை போலீசார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்தோணிராஜ் திடீரென மயங்கி விழுந்தார். இதை கண்ட நீலாங்கரை குற்றப்பிரிவு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அந்தோணிராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்ததும் சென்னை மாநகர போலீஸ் கூடுதல் கமிஷனர் சாரங்கன், தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரி, அடையாறு போலீஸ் துணை கமிஷனர் ரோகித்நாதன் ஆகியோர் நீலாங்கரை போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கூடுதல் கமிஷனர் சாரங்கன், நிருபர்களிடம் கூறியதாவது:-

அந்தோணிராஜ் என்ற கொள்ளையனை போலீசார் விசாரணைக்காக நீலாங்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர் மீது 9 வழக்குகள் உள்ளன. அந்தோணிராஜிடம் இருந்து திருட்டு நகைகளை கைப்பற்ற அழைத்துச் செல்லப்பட்ட போது அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, பின்னர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

போலீஸ் காவலில் இருந்தபோது அவர் இறந்ததால், இதுபற்றி மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்துவார். அதில் போலீசார் மீது தவறு இருப்பது தெரிந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதால் இதில் மேற்கொண்டு எதுவும் கூறமுடியாது.

அந்தோணி ராஜூக்கு என்ன நடந்தது? என்பது பற்றி டாக்டர்கள் அறிக்கை தருவார்கள். மேலும் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தி தரும் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசாரால் தாக்கப்பட்டதால் அந்தோணி ராஜ் இறந்தாரா? அல்லது உடல்நலக்குறைவால்தான் அவர் இறந்தாரா? என்பது மாஜிஸ்திரேட்டு விசாரணை முடிவில்தான் தெரிய வரும் என கூறப்படுகிறது.

அந்தோணிராஜின் நண்பர் ஒருவரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது பெயர் உள்ளிட்ட எந்த விவரங்களையும் தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர்.

Next Story