தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகைகளை வழங்க அலுவலர்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை அறிவுரை


தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகைகளை வழங்க அலுவலர்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை அறிவுரை
x
தினத்தந்தி 19 May 2018 5:00 AM IST (Updated: 19 May 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் நலத்திட்ட செயல்பாடுகள் குறித்த மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சிறந்த முறையில் தனியார் பள்ளிகளில் கல்வி வழங்குவது குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

தொழிற்சங்க தலைவர்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் நிதி கேட்டு அரசுக்கு தனியாக கடிதம் அனுப்பலாம். தொழிலாளர்களை வாரியங்களில் பதிவு செய்யும் பணியில் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களையும், கல்லூரி சாரண இயக்க மாணவ, மாணவிகளையும் ஈடுபடுத்தி கொள்ளலாம்.

கிராம அளவிலான பதிவுகள் மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தொழிலாளர்களை வாரியங்களில் பதிவு செய்வதற்கான முகாம் நடைபெறும் போது போதிய அளவில் விளம்பரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர், இதுவரை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகள், புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டைகள், தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடத்துவது உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அப்துல் அஜீஸ் மற்றும் அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story