வேப்பந்தட்டை அருகே பக்தர்களை முறத்தால் அடிக்கும் வினோத திருவிழா


வேப்பந்தட்டை அருகே பக்தர்களை முறத்தால் அடிக்கும் வினோத திருவிழா
x
தினத்தந்தி 19 May 2018 4:45 AM IST (Updated: 19 May 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை அருகே பக்தர்களை முறத்தால் அடிக்கும் வினோத திருவிழா நடைபெற்றது.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த பிரம்மதேசத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் சமேத தர்மராஜா கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரம்மன் வழிபட்டதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் சித்திரை மகாபாரத பெருவிழா கடந்த 11-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

தொடர்ந்து அர்ச்சுனன் வில்வளைத்தல், திரவுபதி அம்மன் திருக்கல்யாணம், மங்கள முனிக்கு சாதம் ஊட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான பக்தர்களை முறத்தால் அடிக்கும் விழா நேற்று நடைபெற்றது.

கோவிலில் இருந்து பல்வேறு வேடமிட்டு மருளாளிகள் ஊர்வலமாக வந்து அருகில் உள்ள ஏரிக்கரையில் அர்ச்சுனன் மாடு திருப்புதல் விழாவும், இதனையடுத்து வல்லாளகோட்டை இடித்து மருளாளிகள் முறத்தால் பக்தர்களை அடிக்கும் வினோத திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில், முறத்தால் அடி வாங்கினால் பேய், பில்லி சூனியம் பயம் தெளியும், நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். இதனால் திரளான பக்தர்கள் தலையில் முறத்தால் அடி வாங்கினர். தொடர்ந்து தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகளத்தூர் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக காலை கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திரவுபதியம்மனுக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனை பக்தர்கள் சிறுத்தேரில் எழுந்தருள செய்தனர். மாலையில் அம்மன் தீமிதி திடல் அருகே வந்ததும் காப்பு கட்டிய பக்தர்கள் தீக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சிறுகளத்தூர், பொன்பரப்பி, பெரியாகுறிச்சி, பொன் குடிக்காடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story