நாட்டறம்பள்ளியில் 20 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்


நாட்டறம்பள்ளியில் 20 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 19 May 2018 4:32 AM IST (Updated: 19 May 2018 4:32 AM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளியில் 20 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 21 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாட்டறம்பள்ளி,

விபத்தில் சிக்கிய பஸ்சை மீட்கும் போது கிரேன் எந்திரமும் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு நேற்று அதிகாலையில் அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை சேர்ந்த செல்வம் (வயது 37) என்பவர் ஓட்டினார். பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். நாட்டறம்பள்ளியை அடுத்த சண்டியூர் புறவழிச்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையோரம் இருந்த தடுப்பை உடைத்து கொண்டு, 20 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ் டிரைவர் செல்வம், போச்சம்பள்ளியை சேர்ந்த பஸ் கண்டக்டர் கணேசன் (55) மற்றும் பஸ் பயணிகள் கற்பகம், பலராமன், சபீர், கருணாகரன், முனிசாமி, வள்ளியம்மாள், பிச்சாண்டி, வெண்ணிலா உள்பட 21 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்சை நாட்டறம்பள்ளி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் கிரேன் உதவியுடன் பள்ளத்தில் இருந்து பஸ்சை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ் திடீரென ‘ஸ்டார்ட்’ ஆகி முன்பக்கம் இருந்த கிரேனில் மோதியது. இதனால் கிரேன் கவிழ்ந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து மீட்பு பணி முடங்கியது. பின்னர் கிரேனையும், பஸ்சையும் மீட்க மற்றொரு கிரேன் வரவழைக்கப்பட்டு மீட்கும் பணி நடந்தது.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story