சிறுகனூர் அருகே பஸ் மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி


சிறுகனூர் அருகே பஸ் மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 19 May 2018 4:42 AM IST (Updated: 19 May 2018 4:42 AM IST)
t-max-icont-min-icon

சிறுகனூர் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பஸ் மோதி பரிதாபமாக இறந்தார்.

சமயபுரம்,

சிறுகனூர் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பஸ் மோதி பரிதாபமாக இறந்தார். செல்போனில் பேசிக்கொண்டே சாலையை கடக்க முயன்றபோது விபத்தில் சிக்கிக்கொண்டார்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள நன்னிமங்கலம் புதுத்தெருவை சேர்ந்த ராஜ்குமார் மகன் சந்திரமோகன்(வயது 20). இவர் சிறுகனூர் அருகே கொணலையில் உள்ள திருச்சி என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். நேற்று நடக்க இருந்த தேர்வுக்கு ஒன்றாக அமர்ந்து படிப்பதற்காக நண்பர்கள் அழைத்ததன்பேரில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து சந்திரமோகன் கல்லூரிக்கு வந்தார்.

இரவு வரை நண்பர்களுடன் இருந்த அவர் நள்ளிரவில் டீ குடிப்பதற்காக கல்லூரிக்கு எதிரே உள்ள கடைக்கு செல்ல செல்போனில் பேசிக்கொண்டே சாலையை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது தென்காசியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய சந்திரமோகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் இருங்களூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்னி பஸ் டிரைவர் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சக்கைராஜாபேட்டை என்ற பகுதியைச் சேர்ந்த கனகசபை என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story