அகில இந்திய அளவில் தூய்மை நகரங்கள் பட்டியலில் முதல் 3 இடங்களை தவற விட்டது திருச்சி மாநகராட்சி


அகில இந்திய அளவில் தூய்மை நகரங்கள் பட்டியலில் முதல் 3 இடங்களை தவற விட்டது திருச்சி மாநகராட்சி
x
தினத்தந்தி 19 May 2018 4:53 AM IST (Updated: 19 May 2018 5:58 AM IST)
t-max-icont-min-icon

முதல் 3 இடங்களை தவற விட்டது திருச்சி மாநகராட்சி, 6-வது இடத்தையாவது தக்க வைக்க முடியுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

திருச்சி,

அகில இந்திய அளவில் தூய்மை நகரங்கள் பட்டியலில் திருச்சி மாநகராட்சிக்கு முதல் 3 இடங்கள் கிடைக்கவில்லை. இதனால் 6-வது இடத்தையாவது தக்க வைக்க முடியுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

‘ஸ்வட்ச் சர்வேக்‌ஷன்’ என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த தூய்மையான நகரங்களை தேர்ந்தெடுத்து பரிசுகளை அறிவித்து வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு திருச்சி மாநகராட்சி அகில இந்திய அளவில் தூய்மையான நகரங்களின் பட்டியலில் 3-வது இடத்தையும், கடந்த ஆண்டு (2017) 6-வது இடத்தையும் பிடித்தது. இந்த ஆண்டு முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக திருச்சி மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதற்காக சிறிய அளவிலான வாகனங்கள் வாங்கப்பட்டு அவற்றின் மூலம் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தனித்தனியாக பிரித்து சேகரிக்கப்பட்டன. தெருக்களில் குப்பை மேடுகளாக இருந்த இடங்கள் எல்லாம் தூய்மைப்படுத்தப்பட்டு அந்த இடங்களில் கோலம் போடப்பட்டது. நடைபயிற்சிக்கு செல்வோரும் குப்பைகளை சேகரிக்கும் வகையில் திருச்சி பிளாக்கிங் என்ற திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் திரை உலக நட்சத்திரங்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் மாநகராட்சியின் தூய்மை நகரத்திற்கான விளம்பர தூதுவர்களாக நியமிக்கப்பட்டு அவர்கள் மூலமாக மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆண்டு தூய்மை நகரங்கள் பட்டியலில் சிறப்பான இடத்தை பிடிக்க திருச்சி மாநகராட்சி அகில இந்திய அளவில் சுமார் 4 ஆயிரம் நகரங்களுடன் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி துறை தூய்மை நகரங்கள் பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த நகரங்களின் பெயர்களை அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பில் முதலிடத்தை மத்திய பிரதேச மாநிலம் இந்தூரும், 2-வது இடத்தை போபால் நகரும், 3-ம் இடத்தை அரியானா மாநிலம் சண்டிகரும் பிடித்து இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

திருச்சி மாநகராட்சிக்கு இந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என்பதால் முதல் 3 இடங்களை திருச்சி மாநகராட்சி தவற விட்டது என்றே கூறவேண்டும். முதலிடத்தை பிடிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுத்தும் முதல் 3 இடங்களுக்குள் ஒன்றை கூட பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பது திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் 4, 5, 6 உள்ளிட்ட ‘டாப் 10’ நகரங்களுக்கான பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே, இதில் ஏதாவது ஒரு இடமாவது அல்லது ஏற்கனவே வகித்து வரும் 6-வது இடத்தையாவது தக்க வைக்க முடியுமா? என்ற எதிர்பார்ப்பு திருச்சி மாநகர மக்களிடம் ஏற்பட்டு உள்ளது.

இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, ‘திருச்சி மாநகராட்சி பணியாளர்களின் கடுமையான உழைப்பு மற்றும் பொதுமக்கள் அளித்த ஒத்துழைப்பு என்றும் வீண் போகாது. நாங்கள் ஏமாற்றம் அடையவில்லை. எங்களது தூய்மை பணி தொடரும். நிச்சயமாக அடுத்து வெளிவர உள்ள பட்டியலில் சிறப்பான இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

Next Story