வருகிற 2020-ம் ஆண்டுக்குள் ஜவுளித்துறையில் 6¼ கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்க திட்டம்


வருகிற 2020-ம் ஆண்டுக்குள் ஜவுளித்துறையில் 6¼ கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்க திட்டம்
x
தினத்தந்தி 19 May 2018 4:56 AM IST (Updated: 19 May 2018 4:56 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 2020-ம் ஆண்டுக்குள் ஜவுளித்துறையில் 6¼ கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறினார்.

திருப்பூர்,

பின்னலாடை தொழில்துறையின் நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை மத்திய மந்திரி கிரிராஜ் சிங் நேற்று திருப்பூர் வந்தார். பின்னர் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ ஆடைவடிவமைப்பு கல்லூரிக்கு சென்று ஆடை வடிவமைப்பு கல்வி கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்தார். சணல் மூலமாக தயாரிக்கப்பட்ட ஆடைகளையும், வாழைநார், கற்றாழை போன்றவற்றில் தயாரிக்கப்பட்ட ஆடைகளையும் அவர் பார்வையிட்டார்.

பின்னர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை மற்றும் நிப்ட்-டீ கல்லூரி இணைந்து தொழிலாளர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளித்து வருகிறது. அந்த மையத்தையும் அவர் பார்வையிட்டு அங்கிருந்த பெண் தொழிலாளர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் ஆடை உற்பத்தி துறையினருடன் அவர் கலந்துரையாடினார்.

முன்னதாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை மத்திய மந்திரி கிரிராஜ் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

பின்னலாடை தயாரிப்பின் தாயகமாக திருப்பூர் விளங்கி வருகிறது. இந்திய அளவில் 48 சதவீதம் ஆடைகள் திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. திருப்பூர் பின்னலாடை தொழிலில் மட்டும் இல்லாமல் நவீன தொழில் நுட்பத்திலும் சிறந்து விளங்குகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை மூலமாக ஜவுளித்துறையில் திறமையான தொழிலாளர்களை உருவாக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. நாட்டில் பெரும்பான்மையானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித்துறை விளங்கி வருகிறது.

இந்தியாவில் ஜவுளித்துறையில் வருகிற 2020-ம் ஆண்டுக்குள் 6¼ கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையில், பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருகிறார். இந்த துறையில் எந்தவித உத்தரவாதம் இல்லாமல் கடன் வழங்குவதை ரூ.1 கோடியில் இருந்து ரூ.2 கோடியாக உயர்த்தி உள்ளார். இந்த துறைக்கு பட்ஜெட்டில் ரூ.2,500 கோடி கடனுக்காக ஒதுக்கப்பட்டு வந்த நிலை மாறி தற்போது ரூ.7,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிதிநிலையை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையாக பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றை மத்திய அரசு அமல்படுத்தியது. அரசின் கொள்கை முடிவில் எந்தவித தவறும் இல்லை. ஆனால் ஜி.எஸ்.டி. ரிட்டன் பெறுவதில் சில குறைபாடுகள் உள்ளது. அவை தீர்க்கக்கூடியவை தான். முதலில் வர்த்தகம் குறைவதைப்போல் இருந்தாலும் விரைவில் நல்ல மாற்றம் ஏற்படும். ஜி.எஸ்.டி. பிரச்சினையில் இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் முழு தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடகாவின் அரசியல் நிலை குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டபோது, பா.ஜனதா பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறினார்.

இந்த ஆய்வின் போது மத்திய கயறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா எம்.சண்முகம், பொதுச்செயலாளர் விஜயகுமார் மற்றும் தொழில்துறையினர் உடன் இருந்தனர்.

முன்னதாக காங்கேயத்தை அடுத்துள்ள ஊதியூரில் உள்ள கயறு குழுமத்தில் ரூ.4 கோடி மதிப்பிட்டில் விசைத்தறி மூலம் தரை விரிப்பு தயாரிப்பு மற்றும் கயறு தயாரிப்புக்கான புதிய தொழிற்சாலை திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் மத்தியமந்திரி கிரிராஜ்சிங் கலந்து கொண்டு தொழிற்சாலையை திறந்து வைத்து பேசினார். தொடர்ந்து அவர் அங்கு தேங்காய் நார் தயாரிப்பது குறித்தும், நாரில் இருந்து கயறு தயாரிப்பது, விசைத்தறி மூலம் தரை விரிப்பு தயாரிக்கப்படுகிறது என்பதையும் பார்வையிட்டு அது குறித்து விவரம் கேட்டறிந்தார்.

முன்னதாக காலை காங்கேயம் அய்யாசாமிநகர் காலனியில் உள்ள காங்கேயம் சர்வோதய சங்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காங்கேயம் காதி கிளஸ்டர் உற்பத்தி நிலையத்தை மத்தியமந்திரி கிரிராஜ்சிங் திறந்துவைத்தார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள ராட்டை, பஞ்சு தயாரித்தல் போன்றவற்றையும் பார்வையிட்டார். மேலும் சங்க வளாகத்தில் மந்திரி மரக்கன்றுகளை நட்டார்.

விழாவில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் செல்வக்குமாரசின்னையன், கயறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தொழில்கள் மற்றும் வணிகத்துறை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரபிரசாத்,மத்திய மந்திரியை காங்கேயம் சர்வோதய சங்கத்தின் தலைவர் பி.தெண்டபாணி, செயலாளர் ஏ.எஸ்.ரவி, பொருளாளர் சி.நல்லசாமி, காங்கேயம் காயர் கிளஸ்டர் நிர்வாக இயக்குனர் எம்.சரவணகுமார், இட்காட் ஆலோசனை மற்றும் சேவை நிறுவன திட்ட மேலாளர் டி.சேகர், கயறு வாரிய செயலாளர் டி.பி.எஸ்.நெகி, கயிறு வாரிய உறுப்பினர் மந்திராச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story