252 பயனாளிகளுக்கு ரூ.21.25 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் அன்பழகன் வழங்கினார்


252 பயனாளிகளுக்கு ரூ.21.25 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் அன்பழகன் வழங்கினார்
x
தினத்தந்தி 19 May 2018 5:19 AM IST (Updated: 19 May 2018 5:19 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு விழாவில் 252 பயனாளிகளுக்கு ரூ.21.25 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் அன்பழகன் வழங்கினார்.

நொய்யல்,

கரூர் மாவட்டம், காகித ஆலை பேரூராட்சி, அம்மா மாளிகை சமுதாயக்கூடத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு செய்தி மக்கள் தொடர்புத்துறை, வேளாண்மைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை வாயிலாக சிறு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து துறை அலுவலர்களால் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

முகாமில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்தில் 19 பயனாளிகளுக்கும், புதிய குடும்ப அட்டை 12 பயனாளிகளுக்கும், நத்தம் பட்டா நகல் 69 பயனாளிகளுக்கும், பட்டா மாறுதல் 17 பயனாளிகளுக்கும், நத்தம் பட்டா மாறுதல் 7 பயனாளிகளுக்கும், ஓ.பி.சி. சான்று 6 பயனாளிகளுக்கும், வாரிசு சான்று 12 பயனாளிகளுக்கும், இறப்பு சான்று 2 பயனாளிகளுக்கும், இறப்பு சான்று நகல் 2 பயனாளிகளுக்கும், வாரிசு சான்று நகல் 2 பயனாளிகளுக்கும், குடிபெயர்ச்சி சான்று 1 பயனாளிக்கும், சிறு, குறு விவசாய சான்று 5 பயனாளிகளுக்கும், முதல்- அமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 88 பயனாளிக்கு ரூ.10 லட்சத்து 95 ஆயிரத்து 150 மதிப்பில் உதவித்தொகையும், வேளாண் துறையில் 5 பயனாளிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 630 மதிப்பில் இடுபொருட்களும், தோட்டக்கலைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 62 ஆயிரத்து 18 மதிப்பில் வேளாண் உபகரணங்களும் என மொத்தம் 252 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 30 ஆயிரத்து 798 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்றுக்கொண்டு பேசியதாவது:-

டெங்கு காய்ச்சலை தடுக்க சுற்றுப்புறத்தை அனைவரும் சமுதாய அக்கறையோடு சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அரசு சித்த மருத்துவத்துறை சார்பாக வழங்கும் நிலவேம்பு குடிநீரை அனைவரும் பருக வேண்டும். கரூர் மாவட்டத்திலுள்ள அங்கன்வாடிகள் மூலம் சிறப்பான முன்கல்வியுடன் சத்துணவு வழங்கப்படுகிறது. சமூக நலத்துறையின் மூலம் திருமண நிதியுதவிக்கு 30 நாட்களுக்கு முன்னதாகவே இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் 4 சதவீத இடஒதுக்கீடு உள்ளதை தெரிந்து கொண்டு பயன்பெற முன்வர வேண்டும். 18 வயதிற்கு முன்னதாக நடத்தப்படும் திருமணம் அனைத்தும் குழந்தை திருமணமே. சட்டப்படி தவறாகும். பெற்றோர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக 1057 என்ற எண்ணிலும், முதியோர்களுக்கு 1253 என்ற எண்ணிலும், குழந்தைகளுக்கு 1098 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பாலசுப்பிரமணியம், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சாந்தி, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் (பொறுப்பு) இளங்கோ, வேளாண் துணை இயக்குனர் விவேகானந்தன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலா, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குருராஜன், சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் கோபாலகிஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story