கர்நாடக கவர்னரை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


கர்நாடக கவர்னரை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 May 2018 11:53 PM GMT (Updated: 18 May 2018 11:53 PM GMT)

கர்நாடக கவர்னரை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவை,

கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு 104 இடங்கள், காங்கிரசுக்கு 78 இடங்களும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 37 இடங்களும் கிடைத்தன. எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்க வில்லை. இதற்கிடையே பா.ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க வரும்படி கர்நாடக கவர்னர் அழைப்பு விடுத்தார்.

பெரும்பான்மை கொண்ட காங்கிரஸ்–மதசார்பற்ற ஜனதா தள கட்சிக்கு அழைப்பு விடுக்காமல், பா.ஜனதாவுக்கு அழைப்பு விடுத்த கர்நாடக மாநில கவர்னரை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது

இதற்கு கோவை மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ. எம்.என்.கந்தசாமி, காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் கே.பி.எஸ்.மணி, திருமூர்த்தி, கணபதி சிவக்குமார், மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் கருணாகரன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். பின்னர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:–

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி, மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவு கொடுத்ததால் எம்.எல்.ஏ.க் களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்தது. எனவே பெரும்பான்மை உள்ள தங்களை ஆட்சி அழைக்க அனுமதிக்கும்படி கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் கவர்னர் பா.ஜனதா கட்சிக்கு அழைப்பு விடுத்தது கண்டிக்கத்தக்கது.

இதுபோன்று தான் கோவா, மணிப்பூர், மேகலாயா ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தான் பெரும்பான்மை இருந்தது. ஆனால் பா.ஜனதா மற்ற கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறியதால் அந்த கட்சிக்குதான் கவர்னர் அழைப்பு விடுத்தார்.

அதை வைத்து பார்க்கும்போது கர்நாடகாவில் காங்கிரஸ்–மதசார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு தான் பெரும்பான்மை இருக்கிறது. அந்த கூட்டணிக்கு தான் கவர்னர் அழைப்பு விடுத்து இருக்க வேண்டும். ஆனால் கவர்னர் பா.ஜனதாவுக்கு அழைப்பு விடுத்து இருப்பதால் கவர்னர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவது உறுதியாகி இருக்கிறது. இதை கண்டித்து தான் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story