விவசாயிகளுக்கு மண்வள அட்டை சிபாரிசு அடிப்படையிலேயே உரம் விற்பனை


விவசாயிகளுக்கு மண்வள அட்டை சிபாரிசு அடிப்படையிலேயே உரம் விற்பனை
x
தினத்தந்தி 19 May 2018 5:46 AM IST (Updated: 19 May 2018 5:46 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு மண்வள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள சிபாரிசு அடிப்படையிலேயே உரம் விற்பனை செய்யப்பட உள்ளதாக கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்,

மண்வளத்தை பாதுகாத்து உணவு உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உணவு தானிய உற்பத்தியை அதிகரிப்பதில் மண்வளம், நீர்வளம், மண்ணின் தன்மை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது. பயிர்கள் செழித்து வளர தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, நுண்ணூட்ட சத்துகள் உள்ளிட்ட 20 வகையான ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. ஊட்டச்சத்துகள் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நல்ல மகசூல் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. ஒரு பயிருக்கான உரத்தேவையை கணக்கிடுவதற்கு மண்ணில் உள்ள சத்துகளின் அளவு, விவரத்தை அறிந்திட மண்பரிசோதனை செய்வது அவசியம். இதற்காக, மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் கடந்த 2015-ம் ஆண்டு மண்வள திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் விவசாய நிலங்களில் சுழற்சி முறையில் மண் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்த பின்னர் மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1 லட்சத்து 18 ஆயிரத்து 785 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு 1 லட்சத்து 21 ஆயிரத்து 138 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட உள்ளது.

இதற்காக மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மண்வள அட்டையில் மண்ணின் வகை, என்னென்ன சத்துகள் அதிகமாக உள்ளன, பற்றாக்குறையாக உள்ள சத்துகள் விவரம், எந்த பயிருக்கு என்ன சத்துகள் அதிகமாக வழங்க வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டிருக்கும். அதன் அடிப்படையில் பயிருக்கு தேவையான உரம் இடுவதால் உரச்செலவு குறைவதோடு மண்வளமும் பாதுகாக்கப்படுகிறது.

சமச்சீரான உரம் இடுவதன் மூலம் மகசூல் கூடுவதுடன், விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும். எனவே வரும் காலங்களில் மண்வள அட்டையில் உள்ள சிபாரிசின் அடிப்படையில் மட்டுமே விவசாயிகளுக்கு உரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, உரம் விற்பனையாளர்களிடம் இருந்து விற்பனை முனைய கருவி (பாய்ன்ட் ஆப் சேல்) மூலம் மட்டுமே விவசாயிகள் உரம் பெற முடியும். முதற்கட்டமாக குறிப்பிட்ட சில கிராமங்களில் மண்வள அட்டை சிபாரிசு அடிப்படையில் உரம் வழங்கப்பட உள்ளது. எனவே ஒவ்வொரு விவசாயியும் தங்களுடைய ஆதார் அட்டை, குடும்ப அட்டையை போல மண்வள அட்டையையும் பாதுகாப்பாக வைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

Next Story