கூடலூர் அருகே பயிர்களை சேதப்படுத்தி காட்டு யானை அட்டகாசம்
கூடலூர் அருகே பயிர்களை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம் செய்து வருகிறது. எனவே அதை பிடிக்க கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
கூடலூர்,
கூடலூர் தாலுகா ஓவேலி வனச்சரகம் கிளன்வன்ஸ் பகுதியில் 50 வயதான காட்டு யானை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கால் வீக்கத்தால் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தது. இதனால் வனத்துறை யினர் காட்டு யானைக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு கூந்தப்பனை, பாக்கு தழைகள், தென்னை மட்டைகளை உள்ளிட்ட பசுந்தீவனங்களை வழங்கினர். இதனால் காட்டு யானை பூரண குணம் அடைந்தது.
இதையடுத்து அந்த காட்டு யானை பெரியசோலை, எல்லமலை கிராமங்களுக்குள் புகுந்தது. மேலும் அங்கிருந்த வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை தின்று சேதப்படுத்தி அட்டகாசம் செய் தது. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். மேலும் அந்த காட்டு யானை சாலையில் அடிக்கடி வந்து நின்றதால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை இருந்தது. எனவே பொது மக்கள் காட்டு யானையை அங்கிருந்து விரட்டியடித்தனர்.
இதனால் சளிவயல், தருமகிரி ஆகிய பகுதிகளுக்கு சென்ற காட்டு யானை, பயிர்களை சேதப்படுத்தி யது. எனவே காட்டு யானையை விரட்ட கோரி தருமகிரி கிராம மக்கள் கூடலூர் வன அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து வனத்துறையினர் இரவு பகலாக காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
பல நாட்கள் போராட்டத்துக்கு பிறகு காட்டு யானை மீண்டும் ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை பகுதிக்குள் சென்றது. அங்கு வாழைகள், பாக்கு மரங்களை காட்டு யானை மிதித்தும் தின்றும் சேதப் படுத்தியது. ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்று பழக்கப்பட்டு விட்டதால் காட்டு யானை அங்கிருந்து வனப்பகுதிக்கு செல்ல மறுத்து வருகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் காட்டு யானையை பட்டாசு வெடித்தும், தாக்கியும் விரட்டும் சம்பவம் நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்களை காட்டு யானை துரத்தி வருகிறது. எனவே காட்டு யானையை பிடித்து முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு முகாமுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இது குறித்து ஆரோட்டுப்பாறை, செல்வபுரம், பாரதிநகர் கிராம மக்கள் கூறியதாவது:–
கொளப்பள்ளி, சேரம்பாடி பகுதியில் சுற்றி வந்த காட்டு யானை பந்தலூர் வழியாக கூடலூருக்கு வந்தது. அது தற்போது ஓவேலி பகுதியில் முகாமிட்டு வருகிறது. இந்த யானை வனத்துக்குள் சென்று பசுந்தீவனங்களை தேடுவது இல்லை. ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது.
இதனால் தெருக்களில் நடமாட முடிய வில்லை. இது குறித்து கூடலூர் வன அலுவலரை சந்தித்து முறையிட்டும் பலன் இல்லை. எனவே கும்கிகளை வரவழைத்து காட்டு யானையை பிடித்து முதுமலை தெப்பக்காடு முகாமில் அடைத்து பராமரிக்க வேண்டும். ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லா விட்டால் விரைவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.