பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பகுதிகளில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் திராவிடர் கழகம் வலியுறுத்தல்
காரைக்குடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்த பகுதிகளில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று திராவிடர் கழகம் வலியுறுத்தி உள்ளது.
காரைக்குடி,
திராவிடர் கட்சியின் மண்டல செயலாளர் சாமி.திராவிடமணி மாவட்ட நிர்வாகத்திற்கு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– காரைக்குடி நகர் வேகமாக வளாந்து வரும் நகரமாக உருவெடுத்து வருகிறது. விரைவில் மாநகராட்சி அந்தஸ்தை பெற உள்ள இந்த நகருக்கு தற்போது பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒன்று பாதாள சாக்கடை திட்ட பணிகள்.
இந்த பணிகளுக்காக சுமார் ரூ.124 கோடி மதிப்பீடு ஒதுக்கப்பட்டு கடந்த 6 மாதகாலமாக இந்த பணிகள் நகரில் உள்ள வீதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக நகரில் உள்ள வீதிகளில் ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு அதில் குழாய்கள் பதிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் உள்ள வீதிகளில் இந்த பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இந்த பணிகளின் போது இதில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் குழிகள் தோண்டதலில் உள்ள மண்ணை அங்கேயே கொட்டி வைத்து சென்று விடுகின்றனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இது தவிர கடந்த சில தினங்களாக காரைக்குடி பகுதியில் கோடைக்கால மழை பெய்து வருகிறது. இதனால் நகரில் உள்ள வீதிகளில் சேறும், சகதியுமாக உள்ளதால் பாதசாரி மக்கள், மோட்டார் சைக்கிளில் செல்லும் மக்கள் கடும் அவதிஅடைந்து வருகின்றனர்.
இதுதவிர சில வாகன ஓட்டுனர்கள் நிலை தடுமாறி இந்த சேற்றில் விழுந்து செல்கின்றனர்.மேலும் காரைக்குடி பகுதியில் காற்று அடிக்கும் நேரங்களில் இந்த மண் குவியல்களில் இருந்து தூசிகள் பறக்கின்றன. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவாச பிரச்சினை ஏற்பட்டு பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வரும் நிலை உள்ளது. தற்போது காரைக்குடி நகரில் உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் இந்த பணிக்காக தோண்டபட்ட பள்ளங்கள் பணி நிறைவு பெற்ற பின்னர் அந்த இடத்தில் சாலைகள் சீரமைக்கப்பட்டு தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் அனைத்து இடங்களிலும் இந்த குழாய் பதிக்கும் பணி நிறைவு பெற்றவுடன் அந்த இடத்தில் உள்ள மண்குவியல்களை அகற்றி விட்டு உடனடியாக தார்ச்சாலை அமைக்க வேண்டும். அழகு மிக்க நகரமாக காணப்பட்ட காரைக்குடி நகரம் இன்று அலங்கோலமாக காணப்படுகிறது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் வரவேற்க தக்க திட்டமாகும். அதே சமயம் இந்த பணியின்போது அவை மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் அமைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதவிர இந்த பணிக்காக தோண்டப்பட்ட மண்குவியல் மற்றும் பள்ளங்களில் மழைநீர் அப்படியே 2 நாட்கள் வரை தங்கி நிற்பதால் அந்த பகுதி சாலை வழுக்கும் நிலையில் காணப்படுகிறது. இதில் பெரியவர்கள் அந்த வழியாக நடந்து செல்லும்போது சிலர் கீழே விழுந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த பணியை மேற்கொண்டு பணி முடிந்த இடத்தில் தாமதம் இல்லாமல் தார்ச்சாலை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறப்பட்டு உள்ளது.