அரசு நிதி தாமதம் ஆவதால் பொதுமக்களின் பங்களிப்போடு தூர்வாரப்படும் செல்லூர் கண்மாய்


அரசு நிதி தாமதம் ஆவதால் பொதுமக்களின் பங்களிப்போடு தூர்வாரப்படும் செல்லூர் கண்மாய்
x
தினத்தந்தி 19 May 2018 9:30 PM GMT (Updated: 19 May 2018 7:21 PM GMT)

அரசு நிதி தாமதம் ஆவதால், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் பேரில் பொதுமக்களின் பங்களிப்போடு செல்லூர் கண்மாய் தூர்வாரப்பட்டு வருகிறது.

மதுரை,

மதுரை மாநகரில் இருந்த கண்மாய்கள் பெருமளவில் அழிந்து விட்டன. தற்போது செல்லூர், வண்டியூர், மாடக்குளம், ஆணையூர், கொடிக்குளம் உள்ளிட்ட சில கண்மாய்கள் மட்டுமே உள்ளன. இந்த கண்மாய்களும் பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மண்மேவி, கருவேல மரங்கள் வளர்ந்து தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளது. கண்மாய்களில் நீர் இல்லாத காரணத்தால் நகரின் நீர்மட்டம் படுபாதாளத்திற்கு சென்று உள்ளது. குறிப்பாக கோடை காலங்களில் மக்கள் நீருக்கு அலையாய் அலைகின்றனர்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நகரில் உள்ள கண்மாய்களை தூர்வாரி நீர் தேக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பில் இருக்கும் வரத்து கால்வாய்களையும் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்தநிலையில் மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தனது தேர்தல் பிரசாரத்தின் போது, செல்லூர் மற்றும் வண்டியூர் கண்மாய்கள் தூர்வாரப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அரசு நிதி ரூ.60 லட்சம் செலவில் செல்லூர் கண்மாய் தூர்வாரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக கடந்த மாதம் தொடக்க நிகழ்ச்சியும் நடந்தது. அதில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆனால் அறிவித்தப்படி நிதி வரவில்லை. இதனால் ராஜன் செல்லப்பா மக்களின் பங்களிப்புடன் தூர்வாரும் பணியினை மேற்கொள்ள முடிவு செய்தார். அதன்படி கடந்த 20 நாட்களுக்கு முன்பு செல்லூர் கண்மாய் தூர்வாரும் பணி தொடங்கியது. தற்போது 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1 மீட்டர் ஆழத்திற்கும், 30 மீட்டர் அகலத்திற்கும் தூர்வார் வாரும் பணி நடந்துள்ளது.

இந்த பணியினை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, ‘‘மக்களின் பங்களிப்புடன் செல்லூர் கண்மாய் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. மக்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு வருவது மிக மகிழ்ச்சியான வி‌ஷயம். செல்லூர் கண்மாய் முழுமையாக தூர்வாரப்பட்டால் அதிகளவில் நீர் தேக்க முடியும். இதன்மூலம் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். வண்டியூர் கண்மாய் தூர்வாரும் பணி விரைவில் தொடங்கும்‘‘ என்றார்


Next Story