7–வது ஊதியக்குழு பரிந்துரையின்படி அண்ணாமலை பல்கலைக்கழக சிறப்பு அலுவலர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும்
7–வது ஊதியக்குழு பரிந்துரையின்படி அண்ணாமலை பல்கலைக்கழக சிறப்பு அலுவலர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த தனசேகரபாண்டியன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
நான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருதுநகர் மாவட்ட தொலைநிலைக்கல்வி மையத்தின் சிறப்பு அலுவலராக பணிபுரிந்து வருகிறேன். நாடு முழுவதும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 187 தொலைநிலைக்கல்வி மையங்கள் உள்ளன. இங்கு 518 பாடப்பிரிவுகள் கற்பிக்கப்படுகின்றன. இந்த மையங்கள் மூலம் பல்கலைக்கழகத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. சிறப்பு அலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள் பணியிடங்கள் பதவி உயர்வு இல்லாத பணியிடங்களாகும். ஆண்டுதோறும் சம்பள உயர்வு மட்டும் வழங்கப்படும்.
இந்த நிலையில் 2013–ம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை அரசு கையகப்படுத்தியது. பின்னர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த 4 ஆயிரத்து 722 ஆசிரியர் அல்லாத பணியாளர்களில் 2 ஆயிரத்து 635 பேர் உபரியாக இருப்பதாக கணக்கிட்டு, அவர்கள் அனைவரும் அரசின் வேறு துறைகளில் பணி நியமனம் செய்யப்பட்டு 28.4.2017–ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இவர்களுக்கு பல்கலைக்கழக பணிக்காக வழங்கப்பட்ட சம்பளம் கிடைத்து வருகிறது.
இதே அரசாணையில் 798 சிறப்பு அலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள் கூடுதலாக இருப்பதாக கூறப்பட்டது. இவர்கள் வேறு துறையில் நியமனம் செய்யப்படவில்லை. இதனிடையே சிறப்பு அலுவலர்கள், தொடர்பு அலுவலர்களை கண்காணிப்பாளராக பதவி இறக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஐகோர்ட்டு தடை விதித்தது.
இந்தநிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு 11.10.2017–ல் சம்பள உயர்வு வழங்கப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு அமல்படுத்த உத்தரவிடப்பட்டது. ஆனால் ஆசிரியர் அல்லாத பணியாளர்களில் சிறப்பு அலுவலர்கள்,தொடர்பு அலுவலர்கள் தவிர்த்து மற்ற ஊழியர்களுக்கு மட்டும் சம்பள உயர்வு வழங்க பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதுவரை அரசு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் நிலை சிறப்பு அலுவலர்களுக்கும், தொடர்பு அலுவலர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஜெ.பூவேந்திர ராஜன் ஆஜரானார்.
முடிவில், “மனுதாரர்களுக்கு 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் உரிய பலன்களை வழங்க வேண்டும். இந்த உத்தரவானது இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும்“ என நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.