மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு பின்பற்றாவிட்டால் அங்கீகாரம் ரத்து - கலெக்டர் எச்சரிக்கை


மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு பின்பற்றாவிட்டால் அங்கீகாரம் ரத்து - கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 20 May 2018 3:00 AM IST (Updated: 20 May 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு பின்பற்றாவிட்டால் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் ஹரிகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை,

கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்டு உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாமல் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக பல்வேறு புகார்கள் வந்து உள்ளன.

எனவே கோவை மாவட்டத்தில் உள்ள தனியார், சுயநிதி பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய கல்வியகம் அரசாணை எண் 60–ன்படி பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ–மாணவிகளுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படுவதை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேலும் அரசாணை எண் 587–ன்படி மேல்நிலை கல்வி சேர்க்கையின் போது (பிளஸ்–1) எஸ்.சி. மற்றும் எஸ்.டி., மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ–மாணவிகளுக்கு உரிய இடஒதுக்கீடு கட்டாயம் பின்பற்ற வேண்டும். மாணவ–மாணவிகளின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற கூடாது. மேற்படி இடஒதுக்கீடு விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் தலைமையில் தனிக்குழு ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து விண்ணப்பங்களையும் தனிப்பதிவேட்டில் பதிவு செய்து மிகுந்த கவனத்துடன் பரிசீலித்து பள்ளி தலைமை ஆசிரியரால் நிர்ணயிக்கப்பட்ட இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பாடப்பிரிவுகள் வாரியாக மாணவ–மாணவிகளை சேர்க்க வேண்டும். இடஒதுக்கீடு விவரங்களை குறிப்பிட்ட படிவங்களில் பூர்த்தி செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்திற்கு தனியாக அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும்.

எனவே அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் தனிப்பதிவேடு தொடங்கி இடஒதுக்கீடு விவரங்களை பட்டியலிட்டு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 31–ந் தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் சென்னை பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கு அறிக்கை அனுப்புவதுடன் அதன் நகல் ஒன்றை தவறாமல் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தனிப்பதிவேடுகள் பள்ளிகளில் பராமரிக்கப்படுகிறதா? அரசாணையின் படி இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவினர் ஆய்விற்கு வரும்போது பதிவேடுகளை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும். அரசாணைகளின்படி இட ஒதுக்கீடு முறை பின்பற்றாமல் விதிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story