வெளிப்படையான கலந்தாய்வை நடத்தக்கோரி பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
வெளிப்படையான கலந்தாய்வை நடத்தக்கோரி பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் அன்பழகன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் நாராயணன், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் பணி நிரவலை முழுமையாக கைவிடக்கோரியும், ஆசிரியர், மாணவர் விகிதத்தை 1:20 என அறிமுகப்படுத்த வேண்டும், அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், ஒளிவுமறைவற்ற வெளிப்படையான கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் செந்தில்குமார், குருமூர்த்தி, இணை செயலாளர் பிரபாகரன், அமைப்பாளர்கள் ஜெயவேல், திருமலைச்செல்வன், தகவல் தொடர்பாளர் இன்பராஜ், கொள்கை விளக்க செயலாளர் செல்வக்குமரன், மகளிர் அணி செயலாளர் ஆனந்தஈஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சசிக்குமார் நன்றி கூறினார்.