மாற்று இடம் வழங்கக்கோரி அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் பொதுமக்கள் மனு
கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை ராஜவிநாயகர் வீதியை சேர்ந்த பாபு தலைமையில் அந்த பகுதி மக்கள் நேற்று காலை அமைச்சர் எம்.சி.சம்பத்தை சந்தித்து கோரிக்கை மனுகொடுத்தனர்.
கடலூர்,
கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை ராஜவிநாயகர் வீதியில் நாங்கள் சுமார் 75 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகிறோம். எங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு போன்ற வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது.
இந்த நிலையில் சாலை விரிவாக்க பணிக்காக நாங்கள் வசிக்கும் இடத்தை தமிழக அரசு கையகப்படுத்த இருப்பதாக அறிகிறோம். நாங்கள் அனைவரும் தினக்கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறோம். தற்போது வசித்து வரும் வீட்டை தவிர வேறு எதுவும் நிலமோ, வீடோ கிடையாது. சாலை விரிவாக்க பணிக்காக நாங்கள் வசித்து வரும் வீட்டை காலி செய்யும்படி கூறினால் நாங்கள் மிகவும் பாதிக்கப்படுவதோடு அருகாமையில் பள்ளிக்கு சென்று படித்து வரும் எங்கள் குழந்தைகளின் மன நிலையும் பாதிக்கும். எனவே சாலை விரிவாக்க திட்டத்தால் பாதிக்கப்படும் எங்களுக்கு தற்போது வசித்து வரும் இடத்தின் அருகில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் மாற்று இடம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.