குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 19 May 2018 10:30 PM GMT (Updated: 19 May 2018 9:29 PM GMT)

குமரி மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது.

நாகர்கோவில்,

மே மாதம் என்றாலே கோடை வெயில் சுட்டெரிக்கும். அதுவும் அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டால் காலை 7 மணிக்கே வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருக்கும். இரவிலும் வெப்பத்தின் தாக்கம் வாட்டி வதைக்கும். ஆனால் குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு மே மாத தொடக்கத்தில் இருந்தே அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது.

இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே மேலடுக்கு சுழற்சி காரணமாக குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தாக்கம் பெரிதாக தெரியவில்லை. நேற்று முன்தினம் இரவும் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. நாகர்கோவில், பூதப்பாண்டி, குழித்துறை, தக்கலை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழையாகவும், குளச்சல், கொட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் சற்று பலத்த மழையாகவும் பெய்தது.

அதிகபட்சமாக குளச்சலில் 68.4 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. இதே போல குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

நாகர்கோவில்- 3.8, பூதப்பாண்டி- 1.2, கொட்டாரம்- 52.4, குழித்துறை- 3, புத்தன்அணை- 15, தக்கலை- 1, இரணியல்- 14.6, கோழிப்போர்விளை- 10.1, குருந்தன்கோடு- 14.6, முள்ளங்கினாவிளை- 12 என்ற அளவில் மழை பெய்திருந்தது. இதுபோன்று அணை பகுதிகளில் பேச்சிப்பாறை- 16, பெருஞ்சாணி- 9, சிற்றார் 1- 28, சிற்றார் 2- 12 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது.

மழை பெய்து வருவதால் குளங்களுக்கு தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. மேலும் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 550 கனஅடி தண்ணீர் வந்தது. பெருஞ்சாணி அணைக்கு 140 கனஅடி தண்ணீர் வருகிறது.

மேலும் சிற்றார் 1 மற்றும் சிற்றார் 2 அணைகளுக்கும் நேற்று முதல் தண்ணீர் வர தொடங்கி இருக்கிறது. சிற்றார் 1 அணைக்கு 49 கனஅடியும், சிற்றார் 2 அணைக்கு 76 கனஅடியும் தண்ணீர் வரத்து இருக்கிறது. மாம்பழத்துறையாறு அணைக்கு 7 கனஅடியும் தண்ணீர் வருகிறது.


Next Story