குமரி துறைமுக திட்டத்துக்கு எதிராக போலீசாரின் தடையை மீறி நாகர்கோவிலில் நடந்த மறியலால் பரபரப்பு


குமரி துறைமுக திட்டத்துக்கு எதிராக போலீசாரின் தடையை மீறி நாகர்கோவிலில் நடந்த மறியலால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 May 2018 4:30 AM IST (Updated: 20 May 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் போலீசாரின் தடையை மீறி நடந்த மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக 5 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 400 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில்,

பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுக திட்டத்தை கைவிட வேண்டும், அதற்கு பதிலாக குமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகம் கொண்டுவர வலியுறுத்தியும், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும், கடல் சீற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 19-ந் தேதி (நேற்று) நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்துக்கு குமரி மாவட்டத்தில் உள்ள தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் துறைமுகம் அமையவிடாமல் எம்.எல்.ஏ.க்கள் தடுப்பதாகவும், அவர்களை கண்டிப்பதாகவும் கூறி பா.ஜனதா கட்சி நேற்றைக்கு முழு அடைப்பு போராட்டம் நடத்துவதற்கும் திட்டமிட்டது. ஒரே நாளில் துறைமுக எதிர்ப்பு போராட்டம், ஆதரவு போராட்டம் குறித்த அறிவிப்புகளால் குமரி மாவட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நடைபெறுவதாக அறிவித்த போராட்டத்துக்கான அனுமதியை ரத்து செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டார். மேலும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் கைது செய்யப்படுவதோடு, அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

இருப்பினும் தாங்கள் திட்டமிட்டபடி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அறிவித்தன. இந்த போராட்டத்தை தடுக்க நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் மேற்பார்வையில், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதற்காக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாகர்கோவில் போராட்டத்துக்கு வாகனங்களில் வருபவர்களை தடுப்பதற்காக கூடுதலாக 28 சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டு, அவற்றில் கூடுதலாக போலீசார் பணி அமர்த்தப்பட்டு இருந்தனர்.

போலீசாரின் அறிவுரைப்படி கடற்கரை பகுதிகளான கன்னியாகுமரி, மணக்குடி, கீழமணக்குடி, பள்ளம், ராஜாக்கமங்கலம்துறை, குளச்சல், நித்திரவிளை போன்ற பகுதிகளுக்கு நேற்று காலையில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் அந்த வழித்தடத்தில் இயங்கக்கூடிய பஸ்கள் அனைத்தும் அதற்கு முந்தைய ஊர்கள்வரை சென்று திரும்பின.

இதே போல் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக பகுதிகள் அனைத்தும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டன. நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் வேப்பமூடு சந்திப்பு சாலை பகுதி, மத்தியாஸ் வார்டு சந்திப்பு பகுதி ஆகியவற்றில் போலீசார் குவிக்கப்பட்டு, இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. கலெக்டர் அலுவலக சந்திப்பு ரவுண்டானா பகுதியிலும் தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தன. கலெக்டர் அலுவலக பிரதான கேட் மூடப்பட்டு, அதன் முன்பும் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டனர். இதனால் கலெக்டர் அலுவலக சாலையில் வாகன போக்குவரத்து தடைபட்டது.

இந்த நிலையில் காலை 9.30 மணி அளவில் எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த கலெக்டர் அலுவலகம் வர இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். முதலில் காங்கிரஸ் கட்சியின் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையில் பலர் போலீசாரின் தடுப்புகளைத்தாண்டி கலெக்டர் அலுவலகம் முன் வந்தனர். உடனே போலீசார் அவர்களை அங்கிருந்து செல்லுமாறும், இல்லாவிட்டால் கைது செய்வோம் என்றும் எச்சரித்தனர். இதனால் போலீசாருக்கும், வக்கீல் ராதாகிருஷ்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு அவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட சிறைச்சாலைக்கு எதிரே சென்று எம்.எல்.ஏ.க்கள் வருகைக்காக காத்திருந்தனர்.

சற்று நேரத்தில் அங்கே ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ் ஆகியோர் வந்தனர். இதேபோல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோரும் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் நடந்து கொண்டிருந்த போதே சிலர் தடுப்புகளை தள்ளிவிட்டு, கலெக்டர் அலுவலகம் நோக்கி ஓட்டம் பிடித்தனர். போலீசார் அவர்களை விரட்டினர். இதில் ஆஸ்டின் எம்.எல்.ஏ.வும், அவருடன் நின்ற சிலரும் நிலைகுலைந்து கீழே விழுந்தனர். போலீசார் தாக்கியதில் ஆஸ்டின் எம்.எல்.ஏ. நெஞ்சுப்பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து 5 எம்.எல்.ஏ.க்களும் கலெக்டர் அலுவலகத்தின் பிரதான இரும்பு கேட் முன் வந்தனர். அவர்களுடன் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஐக்கிய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும், பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளை சேர்ந்தவர்களும், அருட்பணியாளர்கள் சிலரும் கலெக்டர் அலுவலக வாசல் முன் திரண்டனர். பின்னர் அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 5 எம்.எல்.ஏ.க்களும் சரக்குப்பெட்டக மாற்று முனைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வர்த்தக துறைமுகம் அமைக்கக்கோரியும், போலீசாரைக் கண்டித்தும் பேசினார்கள். இதனை தொடர்ந்து 5 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 220 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 52 பேர் பெண்கள் ஆவர். அவர்கள் அனைவரையும் அரசு பஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்களில் ஏற்றி நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்கவைத்தனர்.

இதேபோல் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் இருந்து வந்த ஆண்களும், பெண்களும் பன்னாட்டு சரக்குப்பெட்டக மாற்று முனைய துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு சென்ற போலீசார் 180 பேரை கைது செய்தனர். அவர்களில் 130 பேர் பெண்கள் ஆவர். அவர்கள் கோட்டாரில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். நாகர்கோவிலில் நடந்த இந்த 2 மறியல் போராட்டங்களிலும் மொத்தம் 400 பேர் கைது செய்யப்பட்டனர்.

கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டம் காரணமாக கே.பி.ரோட்டில் நேற்று மதியம் 1 மணி வரையில் வாகன போக்குவரத்து தடைபட்டிருந்தது. இதனால் அந்த ரோடு வெறிச்சோடி காணப்பட்டது. மதியத்துக்குப்பிறகே அந்த சாலையில் போக்குவரத்து சீரானது. போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது அவ்வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அதற்கு போராட்டக்காரர்கள் வழிவிட்டு, ஒதுங்கி நின்றனர். இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை 6.45 மணி அளவில் விடுவிக்கப்பட்டனர். 

Next Story