தமிழகத்தில் பா.ஜ.க.வின் பினாமி ஆட்சி நடக்கிறது திருநாவுக்கரசர் பேட்டி


தமிழகத்தில் பா.ஜ.க.வின் பினாமி ஆட்சி நடக்கிறது திருநாவுக்கரசர் பேட்டி
x
தினத்தந்தி 20 May 2018 4:30 AM IST (Updated: 20 May 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பா.ஜ.க.வின் பினாமி ஆட்சி நடக்கிறது என்று திருநாவுக்கரசர் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டைக்கு நேற்று வந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவித்து உள்ளபடி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டால், அது எந்த அளவு அதிகாரம் படைத்தது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சி தி.மு.க., கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்பட கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. காவிரி பிரச்சினையில் தமிழக மக்கள் தந்த அழுத்தத்தினால் நமக்கு வெற்றி கிடைத்து உள்ளது. இதை யார்வேண்டுமானாலும் சொந்தம் கொண்டாடலாம்.

காங்கிரஸ் கட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கட்சியை பலப்படுத்தி வருகிறேன்.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவது கண்டிக்கத்தக்கது. இந்த விலை ஏற்றத்தால், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் செயல்பாடு தாளாளர் இல்லாத தனியார் பள்ளியை போல் உள்ளது. மக்களுக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லாத அரசாக தமிழக அரசு உள்ளது. எல்லா துறைகளிலும் ஊழல் அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் பா.ஜ.க. வுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை. ஆனால் தமிழகத்தில் பா.ஜ.க.வின் பினாமி ஆட்சி நடக்கிறது. தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா ஆகிய தென் மாநிலங்களில் ஒரு போதும் பா.ஜ.க காலூன்ற முடியாது. இந்தியாவில் 3-வது அணி என்பது சாத்தியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நடிகை குஷ்பு குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, “குஷ்பு பற்றி எல்லாம் கருத்து சொல்லவேண்டிய அவசியம் இல்லை” என்று அவர் கூறினார். 

Next Story