தஞ்சை- திருச்சி மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரூ.58 கோடியில் கல்லணை கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம்


தஞ்சை- திருச்சி மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரூ.58 கோடியில் கல்லணை கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம்
x
தினத்தந்தி 20 May 2018 4:30 AM IST (Updated: 20 May 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை- திருச்சி மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரூ.58 கோடியில் கல்லணை கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருக்காட்டுப்பள்ளி,

காவிரி டெல்டா பாசனத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணை முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லணையில் இருந்து பிரிந்து செல்லும் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த பாலங்களில் கனரக வாகன போக்கு வரத்து நடைபெற அனுமதியில்லை. இதனால் கோவிலடி பகுதி வழியாக கல்லணைக்கு வருவோர் தற்போது கரிகாலன் மணிமண்டபம் அமைந்துள்ள இடத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கி 1½ கிலோ மீட்டர் தூரம் பாலத்தில் நடந்து சென்று திருச்சிக்கு பஸ் ஏற வேண்டும். இதைப்போல அகரப்பேட்டை வழியாக பஸ்சில் வருபவர்கள் வெண்ணாற்றின் கரையோரத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கி பாலத்தை கடந்து சென்று திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலை மாறி திருச்சிக்கு நேரடியாக கனரக வாகன போக்குவரத்துக்கு வசதி ஏற்படுத்த கல்லணை கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்ட வேண்டும் என்று இந்த பகுதிமக்கள் நீண்ட நாட்களாக அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

கல்லணையில் பாலம் கட்ட வேண்டும் என்று திருவையாறு முன்னாள் எம்.எல்.ஏ. ரெத்தினசாமி சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இது குறித்து அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடமும் கோரிக்கை வைத்தார். இந்த பாலத்தின் அவசியத்தை உணர்ந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி சென்னையில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் கல்லணையில் புதிய பாலம் கட்டப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். புதிய பாலம் கட்டுவது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேரில் கல்லணையில் ஆய்வு மேற்கொண்டனர். மண்ணின் தன்மை, நீரோட்டத்தின் தன்மை, எந்த இடத்தில் பாலம் கட்டினால் சரியாக அமையும் என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்து அரசுக்கு அறி்க்கை அனுப்பி வைத்தனர். இந்த ஆய்வின் அடிப்படையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 4-ந் தேதி பாலம் கட்ட நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. பாலம்கட்ட நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) சார்பில் தொழில் நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதன்படி ஸ்ரீரங்கம் தாலுகா கிளிக்கூடு கிராமத்தில் இருந்து பூதலூர் வட்டம் கல்லணையில் கல்லணை சாலையை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்ட ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டன. திருவானைக்காவல் சாலை மற்றும் கல்லணை சாலையை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணி என பெயரிப்பட்ட இந்த பாலப்பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ந் தேதி கல்லணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் பூமி பூஜையுடன் தொடங்கியது.

கல்லணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் வெளிப்பகுதியில் பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கல்லணையில் உள்ள போலீஸ் நிலையத்தின் அருகில் பாலம் அமைப்பதற்கான பொருட்கள் சேகரிப்பு மற்றும் கலவை போடும் மையம் தற்காலிமாக அமைக்கப்படடுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் பாலம் அமைக்க 2 மீட்டர் விட்டத்தில் 42 மீட்டர் இடைவெளியில் 25 தூண்கள் அமைக்கப்படவேண்டும். இந்த தூண்கள் அனைத்தும் தற்போது அமைக்கப்பட்டு விட்டன. தூண்களுக்கு இடையே வைக்க வேண்டிய கான்கீரிட் அமைப்புகள் கொள்ளிடம் ஆற்றிலேயே பணிகள் முடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

ரூ. 58 கோடியில் கட்டப்படும் இந்த பாலத்தின் மேற்பகுதியில் போக்குவரத்துக்காக 10.50 மீட்டர் அகலத்தில் பாதை அமைய உள்ளது. திருக்காட்டுப்பள்ளி பகுதியில் இருந்து திருச்சிக்கு செல்வோரின் ஒரு நூற்றாண்டு கனவு நனவாகும் வகையில் புதிய பாலத்தில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பாலம் அமைவதன் மூலம் திருச்சியில் இருந்து திருவானைக்காவல் வழியாக கல்லணை, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை. பூம்புகார் வரை பஸ்கள் இயக்க வாய்ப்பு உள்ளது. மாமன்னன் கரிகால சோழன் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கல்லணையை கட்டினார். இதன் பின்னர் அதன் மேல் உள்ள பாலங்களை 1839-ம் ஆண்டு வாக்கில் ஆங்கிலேய பொறியாளர் சர்ஆர்தர்காட்டன் வடிமைத்து கட்டினார். 1883-86-ம் ஆண்டுகளில் பொறியாளர் ஜொகஸ்டட் காவிரி வெண்ணாறு பாலங்களில் மதகுகளை அமைத்துள்ளார்.

1929-31-ம் ஆண்டுகளில் கல்லணையில் இருந்து கல்லணை கால்வாய் அமைக் கப்பட்டு அதில் பாலம் மற்றும் மதகுகளை எல்லிஸ் என்ற பொறியாளர் கட்டியுள்ளார். இதன் பின்னர் கல்லணையில் புதிய கட்டுமானங்கள் ஏதுவும் கட்டப்படவில்லை. மதகுகளை சீரமைப்பது, பாலங்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. தற்போது கல்லணையில் புதிதாக போக்குவரத்துக்காக பாலம் அமைப்பது இதுவே முதல் முறை ஆகும்.


Next Story