காவிரி மேலாண்மை ஆணையத்தை இந்த மாத இறுதிக்குள் அமைக்க வேண்டும் ஜி.கே.வாசன் பேட்டி


காவிரி மேலாண்மை ஆணையத்தை இந்த மாத இறுதிக்குள் அமைக்க வேண்டும் ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 19 May 2018 11:00 PM GMT (Updated: 2018-05-20T03:02:07+05:30)

காவிரி மேலாண்மை ஆணையத்தை இந்த மாத இறுதிக்குள் அமைக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கூறினார்.

திருவாரூர்,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று திருவாரூர் வந்தார். அப்போது அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காவிரி பிரச்சினையில் கிடைத்த வெற்றி தமிழக விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். சுப்ரீம் கோர்ட்டு அளித்த காவிரி தீர்ப்பை 48 மணி நேரத்தில் மத்திய அரசு, அரசிதழில் வெளியிட வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையத்தினை உடனடியாக இந்த மாத இறுதிக்குள் அமைக்க வேண்டும். அதற்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

காவிரியில் இருந்து 2 வாரங்களில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர்் திறக்க முடியும்.

காவிரி நீர் பிரச்சினையால் 4 மாநிலங்களில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழகம் தான். இதில் காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய இரு தேசிய கட்சிகளும் கண்டு கொள்ளாமல் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கவே கவனம் செலுத்தி வந்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வு ஏற்பட்டு பொதுமக்களை கடுமையாக பாதிக்கிறது.

எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். தமிழக மக்கள் மீது மத்திய அரசு வலுக்கட்டாயமாக ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை திணிக்கிறது. அதனை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். கவர்னர் என்பவர்் மரியாதைக்குரியவர். அவர் நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன், துணைத்தலைவர் செல்லதுரை, செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், நகர தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story