சேலம் மாநகரில் பயங்கர சூறாவளி காற்றுடன் கனமழை: 100 மரங்கள் சாய்ந்தன-கார்கள் சேதம்


சேலம் மாநகரில் பயங்கர சூறாவளி காற்றுடன் கனமழை: 100 மரங்கள் சாய்ந்தன-கார்கள் சேதம்
x
தினத்தந்தி 20 May 2018 4:10 AM IST (Updated: 20 May 2018 4:10 AM IST)
t-max-icont-min-icon

பயங்கர சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழைக்கு 100 மரங்கள் சாய்ந்து விழுந்தன.

சேலம்,

சேலம் மாநகரில் நேற்று மாலை பயங்கர சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழைக்கு 100 மரங்கள் சாய்ந்து விழுந்தன. கார்கள் சேதம் அடைந்தது.

சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மதியம் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், மாலையில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், பயங்கர சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது.

சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கிச்சிபாளையம், அம்மாபேட்டை, குகை, அழகாபுரம், புதிய மற்றும் பழைய பஸ்நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. ஒருபுறம் மழை பெய்து கொண்டிருந்தாலும், மறுபுறம் காற்று பலமாக வீசத்தொடங்கியது. இதனால் சாலையில் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை தொடர்ந்து இயக்கமுடியாமல் ஆங்காங்கே அவை நிறுத்தப்பட்டன. சில வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றதை காணமுடிந்தது.

சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் மரங்களும், மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன. சேலம் சங்கர் நகரில் 3 இடங்களில் சாலையோரம் இருந்த மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் தமிழ் அண்ணல் சாலையில் பழனியப்பன் என்பவர் சாலையில் நிறுத்தியிருந்த கார் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் அவரது காரின் முன்பக்கம் சேதமானது.

நடேசன் காலனியில் குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒருவரின் கார் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சேலம் அண்ணா பூங்காவில் மிகவும் பழமையான மரம் சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்காமல் அங்கிருந்த அப்பளம் கடை மீது சாய்ந்து விழுந்தது. அப்போது கடையில் வேலை செய்து கொண்டிருந்த 2 பெண்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

மேலும், சங்கர் நகருக்கு செல்லும் வழியில் ஜங்ஷனில் இருந்து பழைய பஸ் நிலையத்திற்கு ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது, சாலையோரம் இருந்த மரத்தின் ஒருபகுதியின் கிளை திடீரென முறிந்து மின்சார கம்பி மற்றும் அந்த பஸ்சின் மீது விழுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 3 ரோடு அருகே ஒரு கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் கார் பயங்கர சேதமானது.

மக்கான் தெரு, அஸ்தம்பட்டி, பழைய நாட்டாண்மை கட்டிடம், கிச்சிபாளையம், அழகாபுரம், காந்தி மைதானம், அம்மாபேட்டை, சூரமங்கலம், களரம்பட்டி, கருங்கல்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட மரங்களும், மரக்கிளைகளும் சாய்ந்து விழுந்தன. இதனால் பல இடங்களில் மின்சாரம் அடியோடு தடைப்பட்டது. அந்த பகுதியில் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும், மின்சாரம் தடை ஏற்பட்ட பகுதிகளில் மின்சப்ளை கொடுக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். இருப்பினும், பல இடங்களில் மின்வினியோகம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சேலம் கோரிமேடு பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ய தொடங்கியது. இதை பார்த்தவுடன் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து, தெருவிற்கு வந்து ஆலங்கட்டிகளை பாத்திரங்களில் எடுத்து சேகரித்ததை காணமுடிந்தது.

இளம்பிள்ளை, சின்னப்பம்பட்டி சுற்று வட்டார பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. வீதிகளில் எங்கு பார்த்தாலும் ஆலங்கட்டிகள் சிதறி கிடந்தன. இதே போல அயோத்தியாப்பட்டணம், மாசிநாயக்கன்பட்டி, வரகம்பாடி ஆகிய பகுதியில் நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எடப்பாடி-குமாரபாளையம் ரோட்டில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story