எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம்


எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம்
x
தினத்தந்தி 20 May 2018 5:52 AM IST (Updated: 20 May 2018 5:52 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை வருகிற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டுவர இருப்பதாக மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

நாக்பூர்,

இந்திய குடியரசு கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இவர் மத்திய சமூக நீதித்துறை மந்திரியாக பதவி வகிக்கிறார்.

இந்தநிலையில் நாக்பூரில் உள்ள ராஜ்பவன் அரசு விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த இவர் இந்திய குடியரசு கட்சியின் மராட்டிய மாநாடு வருகிற 27-ந் தேதி நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து ராம்தாஸ் அத்வாலே நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது அரசு பணிகளில் உள்ள எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு இல்லை. இதனால் பதவி உயர்வில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை வருகிற ஜூலை மாதம் நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த இருக்கிறோம்.

இதற்கான சட்டவரைவை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story