ஆகாயத்தில் பறப்பது ஆனந்தம்


ஆகாயத்தில் பறப்பது ஆனந்தம்
x
தினத்தந்தி 20 May 2018 3:00 PM IST (Updated: 20 May 2018 3:00 PM IST)
t-max-icont-min-icon

இந்திய விமான படையில் முதன் முதலில் பணிக்கு சேர்ந்து வீரதீரத்தை வெளிப்படுத்திய பெண் விமானிகளில் ஒருவர், பிந்து செபஸ்டின்.

ந்திய விமான படையில் முதன் முதலில் பணிக்கு சேர்ந்து வீரதீரத்தை வெளிப்படுத்திய பெண் விமானிகளில் ஒருவர், பிந்து செபஸ்டின். 25 ஆண்டுகள். பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம். இப்போதும் ஆகாயத்தில் பறக்கிறார். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை இயக்குகிறார். இந்திய பைலட்களின் பட்டியலில் முக்கிய இடத்தினை பிடித்திருக்கும் பிந்து, தனது ஆகாய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்!

உங்கள் பைலட் வாழ்க்கை எப்போது, எப்படி தொடங்கியது?

நான் கேரளாவில் ஈராற்றுப்பேட்டை என்ற சிறிய பகுதியில் பிறந்து வளர்ந்தவள். எனது தந்தை ஜோஸ் ெசபஸ்டின் வித்தியாசமான சிந்தனை கொண்டவர். நான் விஞ்ஞானியாக ஆசைப்பட்டு எம்.எஸ்சி. படித்துக்கொண்டிருந்தபோது பத்திரிகையில் விமான படை விளம்பரத்தை பார்த்தேன். தந்தை கூறியதால் அதற்கு விண்ணப்பித்தேன். என்னோடு விண்ணப்பித்தவர்கள் எல்லாம் விமான படையை பற்றி அறிந்தவர்கள். நான் அந்த காலகட்டத்தில் விமானத்தை அருகில் சென்றுகூட பார்த்ததில்லை. விண்ணப்பித்த 13 பேரில் 8 பேருக்கு வாய்ப்பு கிடைத்தது. பயிற்சி பெற்றோம். இந்திய விமான படையின் முதல் பெண் விமானிகள் குழு என்ற சிறப்போடு பணியில் சேர்ந்தோம். 25 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தபோது, எங்கள் பகுதி மக்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டார்கள். அப்போது ஏர் இந்தியா நிறுவனத்திலே ஒன்றோ, இரண்டோ பெண் விமானிகள்தான் இருந்தார்கள். அதனால் இந்த வேலை மகிழ்ச்சியையும், திரில்லையும் தந்தது.

விமானத்தில் முதல் அனுபவம் எப்படி இருந்தது?

தெலுங்கானாவில் உள்ள துண்டக்கல் ஏர்போர்ஸ் அகாடமியில் 1993-ம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். அங்கு ஒன்றரை வருட பயிற்சியை முடித்துவிட்டு, முதலில் பயிற்சி விமானத்தை ஓட்டினேன். அது ஒரே ஒரு இயந்திரத்தைக்கொண்ட விமானம். என்னோடு பயிற்சியாளரும் இருந்தார். 45 நிமிடம் விமானத்தில் பறந்த அந்த அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது. அடுத்தகட்டமாக தனியாக விமானத்தை ஓட்ட அனுமதிப்பார்கள். அதில் சரியாக வட்டமிடவேண்டும். இல்லாவிட்டால் கூடுதலாக இரண்டு வாய்ப்புகள் தருவார்கள். அதிலும் சரியாக இயக்காவிட்டால், வேலையில் இருந்தே நீக்கிவிடுவார்கள். அதனால் முதலில் தனியாக விமானத்தை இயக்கியபோது எனக்கு ஓரளவு மனஅழுத்தம் இருக்கத்தான் செய்தது. என்னோடு பயிற்சியில் இடம்பிடித்த இரண்டு பேர் ‘ஏர் சிக்னஸ்’ காரணமாக பயிற்சியை பூர்்த்தி செய்யாமலே விலகிவிட்டார்கள்.

விமான விபத்து எதையாவது நேரடியாக பார்த்திருக்கிறீர்களா?

நான் பணியில் சேர்ந்த மூன்று வருடங்களில் ஒரு விபத்து நடந்தது. சென்னையில் இருந்து ஐதராபாத் சென்ற விமான படை விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்து, கீழே விழுந்து நொறுங்கியது. அதில் எங்கள் குழுவை சேர்ந்த சரிதா தியோல் மரண மடைந்தார். எங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல் அதிர்ச்சி யடைந்ேதாம்.

போர் விமானங்களை ஓட்டிய அனுபவம்?

கார்கில் போர் நடந்தபோது நான் போர் விமானம் ஓட்டினேன். அப்போது நாங்கள் காஷ்மீர் எல்லையின் வடக்கு பகுதியில் இருந்தோம். போர் வரும்போது படையினர் அனைவரும் கடுமையாக செயல்பட விழிப்புடன் இருப்போம். போரில் நிறைய துயரங்களை கண்டேன். காயம் அடைந்தவர்களை வடக்கு எல்லைக்கு கொண்டு செல்வதே பெரும் சிரமமாக இருந்தது. அந்த அளவுக்கு கால நிலை நெருக்கடி தந்தது. நெருக்கடிகளை கையாள்வது படையின் பணிகளில் ஒன்றுதான்.

விமான படையில் இருந்து எப்போது விடைபெற்றீர்கள்?

15 ஆண்டுகளாக விமான படையில் பணியாற்றினேன். விங் கமாண்டர் அந்தஸ்தில் அங்கிருந்து விடைபெற்றேன். 20 வருடங்களாவது அங்கு பணி புரிய விரும்பினேன். ஆனால் பணி நீடிப்பு கிடைக்கவில்லை. 2009-ம் ஆண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் பணியில் சேர்ந்தேன். போர் விமானத்தில் இருந்து பயணிகள் விமானத்திற்கு வந்தது கூடுதல் பொறுப்பை தந்திருக்கிறது. ஏர் இந்தியா நிறுவனத்தில் நான் முதன் முதலில் போயிங் 737 விமானத்தை ஓட்டினேன். பக்ரைனில் இருந்து கோழிக்கோட்டிற்கு இயக்கினேன்.

ஆகாயத்தில் ஒரு பைலட் எந்த மாதிரியான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்?

காற்றோடு கலந்துவிடும்போது எல்லா நிலைகளும் மாறும். காற்றும் மாறும். சீதோஷ்ண நிலை மாறும். இத்தனை வித்தியாசங்கள் இருப்பதால் விமானத்தை ‘லேன்ட்’ செய்யவும், ‘டேக் ஆப்’ செய்யவும் நுட்பமாக செயல்படவேண்டும். சாலை பயணத்தில் ஏற்படு வதுபோன்று ஆகாய பயணத்திலும் சில தடைகள் ஏற்படும். கீழே பெருமளவு மழை இருந்தால் மேலேயும் அதன் தாக்கம் ஏற்படும். விமான பயணத்திற்கு கால நிலைதான் பெரிய எதிரி. இப்போது காலநிலையை சரியாக கணிக்கும் கட்டமைப்புகள் விமானத்தில் இருக்கின்றன. துபாயில் இருந்து கிளம்பும்போது சென்னையின் காலநிலை எப்படி இருக்கும் என்பதையும் அறிந்துகொள்ளலாம். எல்லா முன்னேற்பாடுகளும் இருந்தும் எதிர்பாராத நெருக்கடிகள் ஏற்பட்டால் அதை ஆகாயத்தில் இருந்தே சரிசெய்தாகவேண்டும்.

விமானம் ஓட்டச் செல்வதற்கு முன்னால் நீங்கள் எத்தகைய தயாரெடுப்புகளை மேற்ெகாள்வீர்கள்?

நன்றாக ஓய்வெடுப்பேன். இரவில் விமானம் ஓட்டவேண்டும் என்றால் முதல் நாள் நன்றாக தூங்குவேன். நன்றாக தூங்கியிருக்காவிட்டால் தப்பு நடப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துவிடும். மனதிற்கான ஓய்வுக்கு நான் தியானம் செய்வேன்.

விமான பயணிகளோடு நீங்கள் நட்பு பாராட்டுவீர்களா?

விமானத்தில் பயணிகள் ஏறுவதையும், இறங்குவதையும் பார்த்துக்கொண்டிருப்பேன். சில பெண்கள், பைலட்டும் பெண்தான் என்பதை அறிந்தால் பயம்கொள்வார்கள். சிலருக்கு ஆச்சரியமாக இருக்கும். பெண் பைலட்டின் விமானத்தில் பறப்பது மகிழ்ச்சியான அனுபவம் என்றும் சொல்வார்கள். சிலர் விமானத்தில் இருந்து வெளியே வரும்போது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். விமான கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதால் பைலட் அறைக்குள் யாரும் வர முடியாது. பறக்கும்போது நானும் பயணிகள் யாரிடமும் பேசமுடியாது. அதற்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன.

விமானத்தில் பறவை மோதியதாக அடிக்கடி செய்தி வருகிறதே?

விமானம் அதிக வேகமாக செல்வதால், பெரிய பறவைகள் மோதினால் என்ஜின் பாதிக்கப்படும். இதற்காக பயப்படவேண்டியதில்லை. பயணிகள் விமானத்தில் இரண்டு என்ஜின்கள் இருக்கும். ஒன்று செயலிழந்தாலும் இன்னொன்றால் இலக்கை எட்டமுடியும்.

பைலட் பணியில் மறக்க முடியாத அனுபவம்?

இந்தியாவில் உயிர் நிலையில் ஒரே ஒரு எரிமலைதான் உள்ளது. அது போர்்ட்பிளையர் அருகில் பாரன் தீவில் அமைந்துள்ளது. விமான படையில் பணிபுரியும்போது அதன் மேல விமானத்தை ஓட்ட ஒரு வாய்ப்பு கிடைத்தது. இரவும், பகலும் அதன் அருகில் பறந்தேன். பகலில் அது மேகம் போலவும், இரவில் தீக்குண்டம் போலவும் தோன்றும். நம்பமுடியாத காட்சியாக அது இருந்தது.

பைலட் பணியை பெண்களுக்கு ஏற்றதாக கருதுகிறீர்களா?

பெண்கள் சாதிக்க முடியாத துறை என்று எதுவுமே இல்லை. பெண் களின் வளர்ச்சிக்கு எல்லையில்லை. இப்போது ஆணும், பெண்ணும் சமம். பெண் சமத்துவத்தை உண்மையாக்குவது அப்பாக்கள்.

(பிந்து செபஸ்டின் விமான படையில் பணிபுரிந்தபோது திருமணம் செய்துகொண்டார். கணவர் முரளியும் படைப் பிரிவோடு தொடர்புடையவர். பெற்றோர் விருப்பத்தோடு திருமணம் நடந்திருக்கிறது. இவர்களது மகன் பெயர் சித்தார்த். பிந்து, பெரியஜம்போ ஜெட் விமானத்தை ஓட்டவேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். 65 வயது வரை விமானம் ஓட்டவேண்டும் என்றும் விரும்புகிறார்)

Next Story