ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி ஆர்.எஸ்.மங்கலத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசன வசதி பெறும் 72 சிறு கண்மாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர் சோழந்தூர் பாலகிருஷ்ணன் தலைமையில் விவசாய சங்க செயலாளர் தனபாலன், ஆனந்தூர் பனிக்கோட்டை விவசாயி நல்ல சேதுபதி, உப்பூர் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் 300–க்கும் மேற்பட்ட விவசாயிகள் கீழக்கோட்டையில் இருந்து ஆர்.எஸ்.மங்கலம் பஸ் நிலையத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.
அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகளின் வங்கி மற்றும் நகைக்கடனை ரத்து செய்யவேண்டும், வறட்சி நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும், விளை நிலங்களுக்கு வசூலிக்கப்படும் வரியை நிறுத்த வேண்டும், ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
வறட்சி நிவாரணம்அதனை தொடர்ந்து விவசாய சங்க தலைவர் சோழந்தூர் பாலகிருஷ்ணன் கூறும்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மழை பொய்த்து விட்டது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் உள்ளனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி வறட்சி நிவாரணம், பயிர் இன்சூரன்சு போன்றவற்றை உடனடியாக வழங்குவதுடன் விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும். மேலும் ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.