எழுமாத்தூர் குரங்கன் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு


எழுமாத்தூர் குரங்கன் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 21 May 2018 1:54 AM IST (Updated: 21 May 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

எழுமாத்தூர் குரங்கன் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மொடக்குறிச்சி,

மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூர் அனுமன்பள்ளியில் அனுமன்நதி என்கிற குரங்கன் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் எழுமாத்தூர், குலவிளக்கு, பழமங்கலம், கொம்பனைப்புதூர் வழியாக சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. வடகிழக்கு பருவமழை பெய்தால் குரங்கன் கால்வாயில் 3 மாதங்களுக்கு தண்ணீர் செல்லும்.

கடந்த 2016–ம் ஆண்டு குரங்கன் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு எழுமாத்தூர், அய்யகவுண்டன்பாளையம் பகுதி விவசாயிகள் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குரங்கன் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கடும் எதிர்ப்பு

இந்தநிலையில் விவசாயிகளின் எதிர்பையும் மீறி கடந்த சில தினங்களாக குரங்கன் கால்வாய் கடைமடை பகுதியில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு சிறு–குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு கூறியதாவது:–

குரங்கன் கால்வாய் வெட்டுவதற்கு 1952–ம் ஆண்டு அய்யகவுண்டன்பாளையம், கரியாக்கவுண்டன்வலசு, மொடக்குறிச்சி, தானத்துப்பாளையம், மானூர் பகுதி விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தை இலவசமாக வழங்கினார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு அய்யகவுண்டன்பாளையம் நெறிபாறை பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தற்போது குரங்கன் கால்வாய் பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாசனம் பெறாத பகுதிகளில் கான்கிரீட் தளம் அமைத்தால் குடிநீர் ஆதாரம் பாதிக்கும் என்று அரசுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

போராட்டம்

இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைவதோடு, குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் குரங்கன் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க அனுமதிக்க கூடாது.

மேலும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடர்ந்தால் அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து பெரும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story