ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சாவு
ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்ததில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மரணமடைந்தார்.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் கே.சாலமன் (வயது 56). இவர் கோபி அருகே உள்ள வரப்பாளையம் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். சாலமன் நேற்று மாலை பவானியில் இருந்து அந்தியூருக்கு வேலை விஷயமாக ஸ்கூட்டரில் வந்துகொண்டு இருந்தார்.
அந்தியூர் தனியார் பள்ளிக்கூடம் அருகே உள்ள சாலையில் சென்றபோது, வேகத்தடை இருப்பது தெரியாமல் ஸ்கூட்டரை சாலமன் ஓட்டி உள்ளார். இதனால் அவர் ஸ்கூட்டரில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த சாலமனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சாலமன் பரிதாபமாக இறந்தார்.