வேடசந்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: உடல் கருகி பெண் சாவு


வேடசந்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: உடல் கருகி பெண் சாவு
x
தினத்தந்தி 20 May 2018 11:00 PM GMT (Updated: 20 May 2018 10:03 PM GMT)

வேடசந்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு உடல் கருகி பெண் பலியானார். மறந்து விட்டுச்சென்ற செல்போனை எடுக்க வந்தபோது பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சுக்காம்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர், போலீஸ்காரராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி பாலசரஸ்வதி. மோகன்ராஜ் சுக்காம்பட்டியில் தனக்கு சொந்தமான தென்னந்தோப்பில் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

இந்த ஆலையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் சுக்காம்பட்டியில் தங்கியுள்ளனர். இவர்களில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சத்திரப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மனைவி பொன்னுத்தாய் (வயது 52) என்பவரும் வேலை பார்த்தார்.

நேற்று முன்தினம் இரவு, இவர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது தனது செல்போனை தொழிற்சாலையிலேயே மறந்து வைத்துவிட்டு சென்று விட்டார். நேற்று விடுமுறை என்பதால் ஆலைக்கு யாரும் வேலைக்கு வரவில்லை. பொன்னுத்தாய் மட்டும் செல்போனை எடுப்பதற்காக ஆலைக்கு சென்றார். தான் வேலை பார்த்த இடத்துக்கு சென்ற அவர், அறைக்கதவை திறந்த போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. அறை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதில் சிக்கிக்கொண்ட பொன்னுத்தாய், சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

சிறிது நேரத்தில் கட்டிடமும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக்கொண்டிருந்ததால் தீ மேலும் பரவியது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

நிலைய அலுவலர் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ பரவாமல் தடுத்தனர். சில மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டாசு ஆலையில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story