மோட்டார் சைக்கிளில் புதுடெல்லி சென்று திரும்பிய வாலிபர்கள் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்


மோட்டார் சைக்கிளில் புதுடெல்லி சென்று திரும்பிய வாலிபர்கள் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
x
தினத்தந்தி 20 May 2018 11:06 PM GMT (Updated: 20 May 2018 11:06 PM GMT)

விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவண்ணாமலையில் இருந்து புதுடெல்லி வரை மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து விட்டு திரும்பிய வாலிபர்கள் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

திருவண்ணாமலை,

கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு வீரக்கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் ராஜ்குமார் (வயது 25). என்ஜினீயரிங் படித்துவிட்டு படவேட்டில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவர், விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவண்ணாமலையில் இருந்து காஷ்மீர் வரை சென்று வர கடந்த 3-ந் தேதி மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கினார். இவருடன் அவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ராஜ்குமாரும் சென்றார்.

இந்த பயணத்தை கலெக்டர் கந்தசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவர்கள், புதுடெல்லி வரை சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு படவேடு திரும்பினர். இதனையடுத்து நேற்று காலை அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலெக்டர் பங்களாவிற்கு வந்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 3-ந் தேதி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு காஷ்மீர் வரை செல்ல திட்டமிட்டு இருந்தோம். 10 மாநிலங்கள் வழியாக புதுடெல்லிக்கு சென்றோம்.

காஷ்மீரில் சூழ்நிலை சரியில்லை என்று அங்குள்ள தமிழ் ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதனால் நாங்கள் காஷ்மீர் செல்லவில்லை. அதைத் தொடர்ந்து நாங்கள் புதுடெல்லியில் பிரதமர், ஜனாதிபதி மற்றும் மத்திய வேளாண்மை துறை மந்திரி ஆகியோரை சந்தித்து எங்களது கோரிக்கையை கூற முயற்சி மேற்கொண்டோம். ஆனால் எங்களால் அவர்களை சந்திக்க முடியவில்லை.

நாங்கள் பயணத்தின்போது சந்தித்த விவசாயிகள், விவசாயிகளுக்கு அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எங்களிடம் தெரிவித்தனர். இந்த கோரிக்கையை மின் அஞ்சல் மூலமாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மத்திய வேளாண்மை துறை மந்திரி ஆகியோருக்கு அனுப்பி வைத்து உள்ளோம். நாங்கள் மொத்தம் 5 ஆயிரத்து 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story