திட்டமிட்டபடி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெறும்


திட்டமிட்டபடி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெறும்
x
தினத்தந்தி 21 May 2018 5:01 AM IST (Updated: 21 May 2018 5:01 AM IST)
t-max-icont-min-icon

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என்பது பாத்திமா பாபுவின் தன்னிச்சையான முடிவு, திட்டமிட்டபடி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெறும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் அறிவிப்பு.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி திட்டமிட்டபடி நாளை (செவ்வாய்க்கிழமை) கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என்பது பாத்திமா பாபுவின் தன்னிச்சையான முடிவு என்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) கலெக் டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் நேற்று சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. இதில் வியாபாரிகள் மற்றும் போராட்டக்குழுவை சேர்ந்தவர்கள் சிலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் முற்றுகை போராட்டத்துக்கு பதிலாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை பண்டாரம்பட்டியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள அனைத்து கிராமங்களில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதனை சீர்குலைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், போலீசுடன் கூட்டு சேர்ந்து போராட்ட வடிவத்தையும், இடத்தையும் வீராங்கனை அமைப்பை சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு மக்கள் முடிவுக்கு மாறாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தன்னிச்சையாக மாற்றி அமைத்து உள்ளார். இதனால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பில் இருந்து பேராசிரியை பாத்திமா பாபு நீக்கப்படுகிறார். பொதுமக்கள் யாரும் அவருடன் போராட்டம் தொடர்பாக தொடர்பு கொள்ளவோ, ஆலோசனையோ செய்ய வேண்டாம்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு சார்பாக நடந்த சமாதான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளோ, தீர்மானங்களோ எந்த வகையிலும் பொதுமக்களால் உருவாக்கப்பட்ட மக்கள் கூட்டமைப்பை கட்டுப்படுத்தாது. மக்கள் கூட்டமைப்பு ஏற்கனவே எடுத்த முடிவின்படி நாளை (செவ்வாய்க்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

Next Story