ஸ்ரீவைகுண்டத்தில் நாளை கடையடைப்பு வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு


ஸ்ரீவைகுண்டத்தில் நாளை கடையடைப்பு வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 20 May 2018 11:37 PM GMT (Updated: 20 May 2018 11:37 PM GMT)

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக ஸ்ரீவைகுண்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்று வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம்,

ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் காளியப்பன் தலைமையில் வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர்கள் லட்சுமணன், திருநாவுக்கரசு மற்றும் செல்வராஜ், சட்ட ஆலோசகர் முத்துராமலிங்கம், மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ரமேஷ், சமூக ஆர்வலர் சந்துரு உள்பட வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தூத்துக்குடியில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்க உள்ள ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாகவும், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டமான 20 எம்.ஜி.டி திட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுப்பதை கைவிட வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

அப்போது ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் பிரபு, ஜேசுராஜா, கிருஷ்ணமூர்த்தி, நியாஸ், இளையவன் ஆகியோர் கலந்துகொண்டு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு கேட்டனர்.

இதனை ஏற்றுக் கொண்டு நாளை தூத்துக்குடியில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு ஆதரவாக ஸ்ரீவைகுண்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்துவது எனவும், அடுத்தகட்டமாக ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுப்பதை கைவிடக்கோரி பொதுமக்களை ஒன்று திரட்டி இறுதிக்கட்ட போராட்டத்தை நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் அணையில் உள்ள 20 எம்.ஜி.டி திட்ட தலைமை நீரேற்று நிலையத்தை பார்வையிட்டனர்.

Next Story