கலெக்டர் அலுவலக முற்றுகைக்கு பதிலாக கவன ஈர்ப்பு போராட்டம்


கலெக்டர் அலுவலக முற்றுகைக்கு பதிலாக கவன ஈர்ப்பு போராட்டம்
x
தினத்தந்தி 20 May 2018 11:40 PM GMT (Updated: 20 May 2018 11:40 PM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அறிவிக்கப்பட்ட கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்துக்கு பதிலாக கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி அ.குமரெட்டியபுரத்தில் நேற்று 98-வது நாளாக போராட்டம் நடந்தது. 100-வது நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்த தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் போராட்டக்குழுவினருடனான சமாதான கூட்டம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் பிரசாந்த், இணை போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ், போராட்டக்குழுவை சேர்ந்த பாத்திமாபாபு, வக்கீல் அதிசயகுமார், தமிழ்செல்வன், வணிகர் சங்கம் விநாயகமூர்த்தி, பாஸ்கர், செந்தில் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில், நாளை நடைபெற இருந்த கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. அதற்கு பதிலாக அன்றைய தினம் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து போராட்டக்குழுவை சேர்ந்த பாத்திமா பாபு கூறும்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் மக்கள் சார்பில் தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூறினர். அதன் அடிப்படையில் முற்றுகை அறிவிக்கப்பட்ட நாளில், எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் காலை முதல் மாலை வரை கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இது மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும். அடுத்தக்கட்டத்துக்கு நம்மை அழைத்து செல்லும். ஸ்டெர்லைட்டை விரட்டியடிக்கும் இலக்குக்கு வலுசேர்க்கும் என்று நம்பி அனைவரும் சேர்ந்து இந்த முடிவை எடுத்து உள்ளோம். கடையடைப்பு, வாகனம் நிறுத்தம், தொழில்கள் நிறுத்தம் உள்ளிட்டவை அறிவித்தப்படி நடைபெறும் என்று கூறினார்.

Next Story