கூடமலையில் இன்று ஜல்லிக்கட்டு: கலெக்டர் ரோகிணி ஆய்வு


கூடமலையில் இன்று ஜல்லிக்கட்டு: கலெக்டர் ரோகிணி ஆய்வு
x
தினத்தந்தி 21 May 2018 5:20 AM IST (Updated: 21 May 2018 5:20 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கெங்கவல்லி,

கூடமலையில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை மாவட்ட கலெக்டர் ரோகிணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சியில் இன்று (திங்கட்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடு முறையாக செய்யப்பட்டுள்ளதா? என்று மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ் உடன் இருந்தார்.

இந்த ஆய்வின்போது, வாடிவாசல் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா, பொதுமக்கள் பார்வையிடும் வசதி எப்படி உள்ளது, மாடுகளுக்கு தீவனம், தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளதா, மருத்துவ வசதி, தீயணைப்பு வசதி, கால்நடை துறை பிரிவு, ஒலி பெருக்கி முறையாக அமைக்கப்பட்டுள்ளதா? என்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாடுகளுக்கு எந்த தொல்லையும் இல்லாமல் முறையாக வாடிவாசலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், காலை 9 மணி முதல் இந்த விழா நடைபெறும் என்றும், 100 பேர் வீதம் மாடுபிடி வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆய்வின்போது ஆத்தூர் உதவி கலெக்டர் செல்வன், துணை சூப்பிரண்டு பொன்.கார்த்திக்குமார், கெங்கவல்லி தாசில்தார் வரதராஜன், கெங்கவல்லி இன்ஸ்பெக்டர் சண்முகம், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜா, ஊராட்சி செயலாளர் முத்துலிங்கம், ஒன்றிய பொருளாளர் ராஜா, ஒத்தலாகாடு முருகேசன், சாவி முருகேசன், பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ் தலைமையில் 4 துணை சூப்பிரண்டுகள், 10 இன்ஸ்பெக்டர்கள், 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஜல்லிக்கட்டு குழுத்தலைவர் ராஜா மற்றும் முத்துலிங்கம் மற்றும் பொதுமக்களிடம் கலெக்டர் ரோகிணி ஆலோசனை நடத்தினார்.

ஜல்லிக்கட்டு விழாவில் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, உலிபுரம், கன்னங்குறிச்சி மற்றும் துறையூர், திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், ஈரோடு, மதுரை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து மாடுகள் அழைத்து வரப்படுகின்றன. கால்நடை மருத்துவ குழுவினரின் சோதனைக்கு பின்னரே மாடுகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதே போல மாடுபிடி வீரர்கள் ஆத்தூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, கீரிப்பட்டி உள்பட சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நாமக்கல், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை மற்றும் பிற ஊர்களில் இருந்தும் வருகிறார்கள்.

Next Story