பிளஸ்-1 வகுப்பில் கலைப்பிரிவுக்கும் ஆங்கிலவழிக்கல்வி வேண்டும் கலெக்டரிடம் மாணவிகள் மனு


பிளஸ்-1 வகுப்பில் கலைப்பிரிவுக்கும் ஆங்கிலவழிக்கல்வி வேண்டும் கலெக்டரிடம் மாணவிகள் மனு
x
தினத்தந்தி 22 May 2018 5:15 AM IST (Updated: 22 May 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் கலைப்பிரிவுக்கும் ஆங்கில வழிக்கல்வி வேண்டும் என்று கலெக்டரிடம் மாணவிகள் மனு அளித்தனர்.

கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்றது. இதற்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். இதில் வீட்டுமனை பட்டா, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைவசதிகள் செய்து தரக் கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோவை வெள்ளலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் பள்ளி சீருடையில் தங்கள் பெற்றோருடன் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வெள்ளலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி நடைமுறையில் உள்ளது. இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ்-1 படிப்புக்கு முதல் மூன்று பாடப் பிரிவுகளில் ஏதாவது ஒரு பாடப்பிரிவை தேர்வு செய்து அதை ஆங்கில வழி கல்வியாக மாற்றிக் கொள்ளலாம் என்று கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. எனவே முதல் பாடப்பிரிவான கணிதத்தை ஆங்கில வழிக்கல்வியாக மாற்ற பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது போல் கலைப்பிரிவுக்கும் ஆங்கில வழி கல்வி வேண்டும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

சக்தி சேனா இந்துமக்கள் இயக்க மாநில செயலாளர் லோட்டஸ் மணிகண்டன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராஜீ ஆகியோர் தலைமையில், இயக்க நிர்வாகி ஒருவரின் முகத்தை துணியால் மூடி கைகளை இரும்பு சங்கிலியால் கட்டியபடி, சிறை கைதி போல் வந்து மனு அளித்தனர். அதில், தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவதாக முதல்- அமைச்சர் அறிவித்திருந்தார். இதை சக்திசேனா இந்து மக்கள் இயக்கம் வரவேற்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தவறு செய்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்களை மட்டும் விடுதலை செய்யவேண்டும். திட்டமிட்டு தவறு செய்தவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில், பொள்ளாச்சி தாலுகா ஆத்துப்பொள்ளாச்சியை அடுத்த மணக்கடவு பகுதியை சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மக்கள் மேள தாளத்துடன், நடனம் ஆடியபடி வந்து மனு அளித்தனர். அதில், மணக்கடவு கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கேரள எல்லைப்பகுதியில் இருந்து மணக்கடவு செல்லும் வழியில் உள்ள விநாயகர் கோவில் கீழ்புறத்தில் ஆற்றுக்கு செல்ல பொது வழி உள்ளது. இந்த ஆற்றின் அருகே மயானம் உள்ளது. இதன் அருகே உள்ள தனியார் நில உரிமையாளர், மயானத்திற்கு செல்லும் பொதுவழியை கம்பி வேலி அமைத்து தடுத்து உள்ளார். இதனால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து மயானத்திற்கு செல்ல பாதை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

கோவை கண்ணப்பன்நகர் 44-வது வார்டு மக்கள் அளித்துள்ள மனுவில், ‘எங்கள் பகுதியில் ஒரு தம்பதியினர் குலுக்கல் சீட்டு நடத்தி வந்தனர். ஆனால் சீட்டு விழுந்த பின்னரும் அவர்கள் பணம் கொடுக்கவில்லை. பணத்தை திருப்பி கேட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். அந்த தம்பதியினரிடம் சீட்டு செலுத்திய 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்கள். எனவே அந்த பணத்தை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் பொள்ளாச்சி யில் உள்ள மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் அளித்துள்ள மனுவில், ‘கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஏழை, எளிய மாணவர்களை கட்டணமின்றி கல்வி கற்க அரசு வழி வகை செய்துள்ளது. ஆனால் அந்த சட்டத்தை பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகள் பின்பற்றுவதில்லை. அந்த பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தி ஏழை மாணவர்கள் சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Next Story