மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் உண்ணாவிரதம்-கடை அடைப்பு


மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் உண்ணாவிரதம்-கடை அடைப்பு
x
தினத்தந்தி 22 May 2018 4:00 AM IST (Updated: 22 May 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி ஆற்றில் தமிழக அரசு மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஊத்துக்கோட்டையில் பொதுமக்கள் உண்ணாவிரதம் மற்றும் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் கரைகளில் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் ஆழ்துளை கிணறுகளை அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகித்து வருகிறது.

மேலும் அனந்தேரி, போந்தவாக்கம், பேரிவிட்டிவாக்கம், மாம்பாக்கம், வேலகாபுரம், நந்திமங்கலம் உள்பட 15 ஊராட்சிகள் ஆரணி ஆற்றங்கரையில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, தங்கள் கிராமங்களில் குடிநீர் வினியோகித்து வருகின்றன. ஆரணி ஆற்றில் தண்ணீர் தேங்குவதன் காரணமாக அருகே உள்ள கிணறுகளில் தண்ணீர் கிடைப்பதால் விவசாயிகள் நெல், வேர்க்கடலை, கரும்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் தமிழக அரசு, ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி அமைக்க முடிவு செய்து, அதற்கான ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கி உள்ளது. மணல் குவாரி தொடங்கினால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக ஆழ்துளை கிணறுகள் வற்றிவிடுவதுடன், விவசாயம் முழுவதுமாக பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

எனவே இங்கு மணல் குவாரி அமைக்கக்கூடாது என்று கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கடந்த வாரம் ஊத்துக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனாலும் மணல் குவாரி அமைப்பதற்கான ஆயத்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மணல் குவாரி தொடங்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 17-ந் தேதி தி.மு.க.வினர் ஊத்துக்கோட்டை கிராம நிர்வாக அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்தநிலையில் தமிழக அரசு மணல் குவாரி தொடங்கக்கூடாது என்று வலியுறுத்தும் வகையில் ஊத்துக்கோட்டையில் நேற்று அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் நேரு பஜார், நாகலாபுரம், திருவள்ளூர் மற்றும் சத்தியவேடு ஆகிய சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் பொது மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் அனைவரும் கிராம நிர்வாக அலுவலகம் எதிரே ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

Next Story