கர்நாடகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பா.ஜனதாவை பலப்படுத்துவேன்: எடியூரப்பா பேட்டி
கர்நாடகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பா.ஜனதாவை பலப்படுத்துவேன் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடையவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக கட்சி தொண்டர்கள் ஏமாற்றம் அடைய தேவை இல்லை. இதை பற்றி கவலைப்படாமல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்துவேன்.
கட்சி பணிகள் எந்த தொய்வும் இல்லாமல் நடந்து கொண்டே இருக்கும். கர்நாடக சட்ட சபையில் காலியாக உள்ள 3 தொகுதிகள் மற்றும் மேல்-சபை தேர்தல், அடுத்த ஆண்டு(2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றுக்கு நாங்கள் தீவிரமாக தயாராவோம். எங்கள் கட்சியில் தோல்வி அடைந்த வேட்பாளர்களுடன் நாளை(புதன்கிழமை) ஆலோசனை நடத்த உள்ளேன்.
தோல்விக்கு காரணம் என்ன, அதை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்துவேன். அந்த தொகுதிகளில் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவேன். ஆட்சி அதிகாரம் கிடைக்கவில்லை என்பதற்காக அமைதி காக்கும் பேச்சுக்கே இடம் இல்லை.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story