பெங்களூருவில் நாளை கோலாகல விழா: குமாரசாமி, முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார்
பெங்களூருவில் நாளை நடைபெறும் கோலாகலமான விழாவில் குமாரசாமி, முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12-ந் தேதி நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுகள் கடந்த 15-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் எந்த கட்சிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) கூட்டணி 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. சுயேச்சைகள் 2 பேர் வெற்றி வாகை சூடினர். ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அறிவித்தது.
பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரின. பெரும்பான்மை இல்லாத நிலையிலும் பா.ஜனதா ஆட்சிக்கு கவர்னர் அனுமதி வழங்கினார். எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பெரும்பான்மை இல்லாததால், மூன்றே நாட்களில் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து ஜனதா தளம்(எஸ்)-காங்கிரஸ் கூட்டணி சார்பில் அளிக்கப்பட்டுள்ள கடிதத்தின் அடிப்படையில் பதவி ஏற்க வருமாறு குமாரசாமிக்கு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். அதை குமாரசாமி ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த பதவி ஏற்பு விழா நாளை(புதன்கிழமை) மாலை 4 மணிக்கு பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் நடக்கிறது. இதில் குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். அவருக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்த விழாவுக்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விதான சவுதா முன் பகுதியில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்-மந்திரிகள் சந்திரசேகரராவ்(தெலுங்கானா), சந்திரபாபுநாயுடு(ஆந்திரா), மம்தா பானர்ஜி(மேற்கு வங்காளம்) மற்றும் பா.ஜனதாவுக்கு எதிராக உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.
இதனால் பதவி ஏற்பு விழா நடைபெறும் விதான சவுதாவை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர உள்ளூர் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அமர சுமார் 80 ஆயிரம் இருக்கைகள் போடப்படுகின்றன. விழா நடைபெறுவதையொட்டி நாளை, விதான சவுதா முன்பு சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. அந்த சாலையில் இருந்தபடியும் பொதுமக்கள் பதவி ஏற்பு விழாவை காண 20 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பதவி ஏற்பு விழா ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் இருந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதால், இது வெறும் பதவி ஏற்பு விழா மட்டுமின்றி, பா.ஜனதாவுக்கு எதிராக அணி திரட்டும் கூட்டமாகவும் பார்க்கப்படுகிறது. அதனால் இந்த விழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் தலைவர்களை ஒன்றுபடுத்தும் களமாக, கர்நாடக தேர்தல் ஒரு அடித்தளம் அமைத்துவிட்டது என்றே சொல்லலாம்.
Related Tags :
Next Story