நாமக்கல்லில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை மரங்கள் சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு


நாமக்கல்லில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை மரங்கள் சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 22 May 2018 4:15 AM IST (Updated: 22 May 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதையொட்டி நாமக்கல்-துறையூர் சாலையில் மரங்கள் சரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக ஆங்காங்கே கோடை மழை பெய்தது. இருப்பினும் நாமக்கல் நகரில் சாரல்மழை மட்டுமே பெய்தது. இந்த நிலையில் நேற்றும் காலை முதலே வெயில் பொதுமக்களை சுட்டெரித்தது. இரவு 7.30 மணி அளவில் திடீரென இடி-மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்ய தொடங்கியது. இந்த ஆலங்கட்டியை சிறுவர்கள் கையில் எடுத்து மகிழ்ந்தனர்.

சுமார் 1 மணி நேரம் பெய்த இந்த மழை காரணமாக சாலையோரங்களிலும், பள்ளமான பகுதிகளிலும் ஆங்காங்கே மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்க்க முடிந்தது. மேலும் இந்த மழை காரணமாக வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனங்களை இயக்குவதை காண முடிந்தது.

மரங்கள் வேரோடு சரிந்தன

இந்த மழையின் போது பலத்த சூறாவளி காற்று வீசியதால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சரிந்தன. குறிப்பாக நாமக்கல்-துறையூர் சாலையில் தூசூர், பெருமாப்பட்டி பகுதியில் மரங்கள் சரிந்து சாலையில் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மழை காரணமாக ஒரிரு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.

இதேபோல் சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதியிலும் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. 

Next Story