மனைவியை கொன்று உடலை தார்ப்பாயில் கட்டி வள்ளியூருக்கு கொண்டு சென்றவரால் பரபரப்பு


மனைவியை கொன்று உடலை தார்ப்பாயில் கட்டி வள்ளியூருக்கு கொண்டு சென்றவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 May 2018 4:45 AM IST (Updated: 22 May 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் பஸ் நிலையத்தில் மனைவியை கொன்று உடலை தார்ப்பாயில் கட்டி வள்ளியூருக்கு கொண்டு சென்றவரால் பரபரப்பு ஏற்பட்டது. உடல்நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடிய போது அவர் சிக்கினார்.

வள்ளியூர்,

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பூங்காநகர் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 27). இவருக்கு கவுசல்யா (24) என்ற மனைவியும், வேல்முருகன் (3), பொன்னுலட்சுமி (2) ஆகிய இரண்டு குழந்தைகளும் உண்டு. முத்துராஜ் தனது குடும்பத்தினருடன் ஊர் ஊராக சென்று ஊசி, பாசி வியாபாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நாகர்கோவிலுக்கு வியாபாரத்துக்காக குடும்பத்துடன் சென்றார். பின்னர் நாகர்கோவில் வடசேரி பஸ்நிலைய பகுதியில் தங்கியிருந்து வியாபாரம் செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு குழந்தைகள் தூங்கிய பிறகு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த முத்துராஜ், அங்கு கிடந்த இரும்பு கம்பியால் கவுசல்யாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

பின்னர் ஊருக்கு கொண்டு சென்று கவுசல்யாவின் உடலை அடக்கம் செய்துவிட முடிவு செய்தார். மனைவியின் உடலை எப்படி கொண்டு செல்லலாம் என யோசித்தார். உடனே தன்னிடம் இருந்த தார்ப்பாயில் மனைவியின் உடலை கட்டினார். அங்கு நின்ற ஒரு லோடு ஆட்டோவை வள்ளியூருக்கு செல்ல வேண்டும் என்று கூறி வாடகைக்கு அழைத்துள்ளார்.

தன்னிடம் இருந்த பொருட்களை ஏற்றுவது போல், தார்ப்பாயில் கட்டி வைத்திருந்த மனைவியின் உடலையும் லோடு ஆட்டோவில் முத்துராஜ் ஏற்றினார். பின்னர் தூங்கிக் கொண்டு இருந்த குழந்தைகளை எழுப்பி தன்னுடன் லோடு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டார். இதனை அறியாத லோடு ஆட்டோ டிரைவர், அங்கிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு வள்ளியூருக்கு சென்றார்.

பின்னர் லோடு ஆட்டோவில் இருந்து மற்ற பொருட்களுடன் மனைவியின் உடலையும் இறக்கி தனது வீட்டுக்குள் முத்துராஜ் கொண்டு சென்றார். சிறிது நேரத்தில் சத்தம் போட்டு கதறி அழுதார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் என்னவோ, ஏதோ என்று முத்துராஜ் வீட்டுக்கு ஓடி வந்தனர். அப்போது தனது மனைவிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அவர் இறந்து விட்டதாகவும் கூறினார்.

அப்போது கவுசல்யாவின் தலை மற்றும் முகத்தில் ரத்தக்காயம் இருந்தது. இதை பார்த்து அங்கிருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி முத்துராஜிடம் கேட்டனர். அதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். உடனே முத்துராஜிடம் நடந்த விவரங்களை கேட்ட போது, அவர் சரிவர பதில் கூறவில்லை. இதில் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் முத்துராஜை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து மீண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது. பொதுமக்களின் தாக்குதலை சமாளிக்க முடியாத முத்துராஜ், கவுசல்யாவை கொலை செய்து நாடகமாடியதை ஒப்புக் கொண்டார்.

அங்கிருந்தவர்கள் வள்ளியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகராஜ், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முத்துராஜிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது, நாகர்கோவில் பஸ் நிலையத்தில் மனைவிக்கும், தனக்கும் இரவில் தகராறு ஏற்பட்டது. அப்போது மதுபோதையில் இருந்த நான், அங்கு கிடந்த இரும்பு கம்பியால் மனைவியை அடித்தேன். இதில் கவுசல்யா இறந்து விட்டார். கொலையை மறைப்பதற்காக தார்ப்பாயில் உடலை கட்டி லோடு ஆட்டோவில் ஏற்றி ஊருக்கு கொண்டு வந்தேன். அவள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்ததாக கூறினேன். நான் நாடகமாடியதை பொதுமக்கள் கண்டுபிடித்து விட்டனர் என்று போலீசாரிடம் முத்துராஜ் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து முத்துராஜை போலீசார் கைது செய்தனர். அக்கம்பக்கத்தினர் தாக்கியதால் முத்துராஜ் காயம் அடைந்து இருந்ததால் வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் காவலுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

மனைவியை கணவரே கொன்று, உடல்நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடிய சம்பவம் வள்ளியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story