பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது


பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
x
தினத்தந்தி 22 May 2018 4:45 AM IST (Updated: 22 May 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். உடந்தையாக இருந்த இடைத்தரகரும் பிடிபட்டார்.

திருவண்ணாமலை,

சென்னையை சேர்ந்தவர் சுனில்குமார். இவர், திருவண்ணாமலை பெரிய தெருவில் தனியார் தங்கும் விடுதி வைத்துள்ளார். சுனில்குமார், கொசமடத் தெருவில் ஒரு நிலத்தை வாங்கி பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று தங்கும் விடுதியின் மேலாளர் திருக்கோவிலூரை சேர்ந்த ஜெயச்சந்திரனிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து ஜெயச்சந்திரன் திருவண்ணாமலையை சேர்ந்த மூர்த்தி என்ற இடைத்தரகர் மூலம் திருவண்ணாமலை சிறுபாக்கம் பகுதியை சேர்ந்த திருவண்ணாமலை டவுன் சர்வேயர் கருணாகரனிடம் (வயது 50) விண்ணப்பித்தார். பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு சர்வேயர் கருணாகரன் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார்.

இதுகுறித்து ஜெயச்சந்திரன், சுனில்குமாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். பின்னர் சுனில்குமார், ஜெயச்சந்திரன் மூலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் படி நேற்று காலை ஜெயச்சந்திரன் திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சர்வேயர் அலுவலகத்திற்கு சென்றார்.

பின்னர் அவர், சர்வேயர் கருணாகரனிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் ரஜினி, அருள்பிரசாத் மற்றும் போலீசார் லஞ்சம் வாங்கிய சர்வேயரை கையும், களவுமாக பிடித்தனர்.

இதையடுத்து சர்வேயர் கருணாகரனையும், லஞ்சம் வாங்க உடந்தையாக இருந்த மூர்த்தியையும் போலீசார் கைது செய்து தாலுகா அலுவலகத்தில் உள்ள தனி அறையில் வைத்து 3 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர். 

Next Story