‘நிபா’ வைரஸ் பரவாமல் தடுக்க கலெக்டர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்


‘நிபா’ வைரஸ் பரவாமல் தடுக்க கலெக்டர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 22 May 2018 5:27 AM IST (Updated: 22 May 2018 5:27 AM IST)
t-max-icont-min-icon

கேரள மாநிலத்தில் பரவி வரும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் தேனி மாவட்டத்தில் பரவாமல் தடுப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

தேனி,

சிக்குன்குனியா, பன்றிக்காய்ச்சல், டெங்கு போன்றவற்றை தொடர்ந்து தற்போது ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் கேரள மாநிலத்தை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில் இந்த வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. கேரளாவில் இந்த வைரஸ் காய்ச்சலால் அடுத்தடுத்து உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ‘நிபா’ வைரஸ் தாக்கியவருக்கு முதல் அறிகுறியாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். பின், கடுமையான தலைவலி, காய்ச்சல் உண்டாகும். இது மூளைக் காய்ச்சலாக மாறி உயிர் இழப்பை ஏற்படுத்தும் எனவும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் பரவும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் தமிழகத்துக்கும் பரவும் அபாயம் உள்ளதாக எண்ணி இரு மாநில எல்லைகளில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளனர். குறிப்பாக தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களில் ஒன்றான தேனி மாவட்டத்திலும் மக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி மலைச்சாலை என 3 மலைச்சாலைகள் தமிழக-கேரளாவின் இணைப்புச் சாலைகளாக உள்ளன. இந்த சாலைகள் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

கேரள மாநிலத்தில் உள்ள தேயிலை தோட்டங்கள், ஏலக்காய் தோட்டங்கள், காபி தோட்டங்களுக்கு தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தேனி மாவட்டத்தில் இருந்து ஜீப்களில் சென்று வருகின்றனர். கோழிக்கோடு பகுதிக்கு கம்பம் பகுதியில் இருந்து காய்கறி, இறைச்சிக்கான மாடுகளை ஏற்றிக் கொண்டு தினமும் ஏராளமான சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், இருமாநில எல்லைகளில் உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால் தேனி மாவட்டத்திலும் இந்த வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் ‘நிபா’ வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சக்திவேல், சுகாதாரத்துறை துணை இயக்குனர் சண்முகசுந்தரம், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருநாவுக்கரசு ஆகியோர் பங்கேற்றனர்.

‘நிபா’ வைரஸ் பரவும் விதம், தடுப்பு நடவடிக்கைகள் போன்றவை தொடர்பாக அதிகாரிகளுடன் கலெக்டர் விவாதித்தார். இந்த வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள அரசுத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story