சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் வேலைக்கு ரெயில்வே துறையில் 9739 பணியிடங்கள்


சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் வேலைக்கு ரெயில்வே துறையில் 9739 பணியிடங்கள்
x
தினத்தந்தி 22 May 2018 10:55 AM IST (Updated: 22 May 2018 10:55 AM IST)
t-max-icont-min-icon

மத்திய ரெயில்வே துறையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் வேலைக்கு 9 ஆயிரத்து 739 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் மத்திய ரெயில்வே துறை. உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். 10 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள் இந்திய ரெயில்வே துறையில் பணியாற்றுகிறார்கள்.

தற்போது ரெயில்வே துறையின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் ஆர்.பி.எப். போலீஸ் படையில் கான்ஸ்டபிள் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 8 ஆயிரத்து 619 பணியிடங்கள் உள்ளன. சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 1120 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கான்ஸ்டபிள் பணியிடங்களில் ஆண்களுக்கு 4403 இடங்களும், பெண்களுக்கு 4216 இடங்களும் உள்ளன. சப்-இன்ஸ்பெக்டர் பணியில் ஆண்களுக்கு 819 இடங்களும், பெண்களுக்கு 301 இடங்களும் உள்ளன. இட ஒதுக்கீடு அடிப்படையில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கையை விரிவான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களைப் பற்றி பார்ப்போம்...

வயது வரம்பு

கான்ஸ்டபிள் பணி விண்ணப்பதாரர்கள் 1-7-2018-ந் தேதியில் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு 20 முதல் 25 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

குறைந்தபட்சம் மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றவர்கள் கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். பட்டப்படிப்பு படித்தவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

உடல் தகுதி:


கான்ஸ்டபிள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கும் ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 165 செ.மீ. உயரமும், பெண்கள் 157 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 80 செ.மீ. மற்றும் விரிவடைந்த நிலையில் 85 செ.மீ. இருக்க வேண்டும். மார்பளவு ஆண் களுக்கு மட்டுமானது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு உயரம் மற்றும் மார்பளவில் தளர்வுகள் பின்பற்றப்படுகிறது.

கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் முன்னாள் படைவீரர்கள், பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.250 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:


சி.பி.டி. எனப்படும் கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் உடல் அளவுத் தேர்வு, உடல்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:


விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30-6-2018-ந் தேதியாகும். இவை பற்றிய விவரங்களை http://www./indianrailways.gov.in/railwayboard என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

Next Story