சமுதாய சீர்திருத்த சிற்பி ராஜாராம் மோகன்ராய்


சமுதாய சீர்திருத்த சிற்பி ராஜாராம் மோகன்ராய்
x
தினத்தந்தி 22 May 2018 12:44 PM IST (Updated: 22 May 2018 12:44 PM IST)
t-max-icont-min-icon

இன்று (மே 22-ந்தேதி) ராஜாராம் மோகன்ராய் பிறந்த தினம்.

மூட நம்பிக்கையின் இருளில் இந்தியா மூழ்கி கிடந்தபோது, அதை கிழித்தெறியும் வெளிச்சக்கதிராக தோன்றியவர் ராஜாராம்மோகன்ராய். இவர், 1772-ம் ஆண்டு மே 22-ந்தேதி வங்காளத்தின் உஜிக்ளி மாவட்டத்தில் பிறந்தார். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே நவ இந்தியாவை உருவாக்க வித்திட்ட சீர்திருத்த சிற்பியும் இவரே.

சாதிவேறுபாடுகளும் அதன் உட்பிரிவுகளும் தேசபக்தி மலர தடைக்கற்கள். இந்த தடைக்கற்களை படிகற்களாக மாற்ற கல்வி அவசியம். அதிலும் ஆங்கில கல்வி அவசியம் என உணர்ந்த ராஜாராம்மோகன்ராய் ஆங்கில கல்வியை வலியுறுத்த தயங்கவில்லை. வேதங்கள் ஒரே கடவுளைத்தான் கூறுகின்றன. மூடநம்பிக்கையையும், சாதியையும், பெண்ணடிமையையும் எங்கேயும் கூறவில்லை என்பதை வேத கல்வி மூலம் உணர்ந்த ராஜாராம்மோகன்ராய் வேதங்களின் சாரம் என்ற நூலை வங்கமொழியில் எழுதினார். இது மக்கள் விழிப்புணர்வு அடைய வழிவகுத்தது.

நம் தமிழகத்தில் சங்ககாலத்தில் அவ்வை, பொன்முடியார், காக்கைபாடினியார் என முப்பதுக்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் ஆண்களுக்கு இணையாக ‘கவி’ பாடி வாழ்ந்ததை வரலாற்றில் அறிகிறோம். ஆனால் இடைக்காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என கூறி பெண்களை அடிமைபடுத்தும் துர்பாக்கியமான நிலை உருவானது.

அதிலும், 250 ஆண்டுகளுக்கு முன்பு சதி என்னும் உடன்கட்டை ஏறும் மிகக்கொடுமையான பழக்கம் இருந்தது. ராஜாராம்மோகன்ராயின் அண்ணன் இறந்தபோது தன்கண் முன்னே தனது அண்ணி வலுக்கட்டாயமாக உடன்கட்டை ஏறியபோது அவர் கொதித்தெழுந்தார். சதிக்கு எதிராக கடுமையாக போராடினார். இதனால் 1829-ம் ஆண்டு சதி எனும் மூடப்பழக்கத்திற்கு தடை வந்தது.

ஆனால் பழமைவாதிகள் தடையை எதிர்த்து லண்டன் ப்ரிவ்யூ கவுன்சில் நீதிமன்றத்தில் வாதாடினர். அப்போது ராஜாராம்மோகன்ராய் லண்டன் சென்று வாதாடியதால் சதி பழக்கத்தை தடை செய்தது சரியே என தீர்ப்பு கிட்டியது. இதன்மூலம் இந்திய மாதர் சமூகத்தை சுபீட்சமடைய செய்த மாமனிதர் ராஜாராம்மோகன்ராய்.

பிரம்மசமாஜம் என்ற சீர்திருத்த இயக்கத்தை தொடங்கி பல சீர்திருத்த இயக்கங்கள் தோன்ற அவர் வழிசெய்தார். ராஜாராம்மோகன்ராயை சிறந்த மனிதராக மட்டும் கருதாமல் இந்திய மறுமலர்ச்சியின் தந்தையாகவும், இந்திய சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகவும் இந்திய வரலாறு பெருமைக்கொள்வது மறுமலர்ச்சி இந்தியாவுக்கு கிடைத்த ஓர் கிரீடம்.

-தொளசம்பட்டி குமார்மாணிக்கம் 

Next Story